கரண்ட் பில் கட்டணம் குறைகிறது… கர்நாடக அரசு பிளானும், பின்னணி சீக்ரெட்டும்!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இதன் ஆட்சிக் காலம் இன்னும் ஓராண்டே இருக்கிறது. வரும் 2023 மே மாதம் மொத்தமுள்ள 113 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே கடைசி நேர சலுகை அறிவிப்புகள் மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வாக்கு வங்கி சதவீதத்தை அதிகரிக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பான ஒன்று.

அந்த வகையில் கர்நாடக மாநில அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமான மின் பயன்பாட்டு வரம்புகளுக்கும் கட்டணத்தை குறைக்க கர்நாடக மாநில மின்சாரத் துறை திட்டமிட்டுள்ளதாம். இது வரும் ஜனவரி முதல் அமலுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, 70 பைசா முதல் 2 ரூபாய் வரை கட்டணக் குறைப்பு நிகழ்த்தப்படும்.

இதுதொடர்பாக கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்சாரத்துறை அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளது. அதில் கட்டணக் குறைபாடு தொடர்பான விஷயங்கள் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு கட்டணக் குறைப்பு குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 50 முதல் 200 யூனிட்கள் வரை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு யூனிட் பயன்பாட்டிற்கு 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

200 யூனிட்களுக்கு மேலான பயன்பாட்டிற்கு 8.20 ரூபாய், 7.70 ரூபாய் என இரண்டு வரம்புகளில் கட்டணம் செலுத்தி வந்தவர்கள் இனிமேல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 7 ரூபாய் மட்டும் செலுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மின் கட்டண குறைப்பு நடவடிக்கை மூலம் வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், HT-LT வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.

இந்த கட்டணக் குறைப்பில் பெஸ்காம் நிறுவனமும் கைகோர்க்கும் என்று தெரிகிறது. பெஸ்காம் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள மின் கட்டணத்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சுமையை சந்தித்து வருகின்றனர். பலர் பெஸ்காமை கைவிட்டு விட்டு மாற்று மின் விநியோக நிறுவனங்களை அணுக திட்டமிட்டு வருகின்றனர்.

எனவே மின் கட்டண குறைப்பு நடவடிக்கையானது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. அனைத்து விதமான மின் பயன்பாட்டு வரம்புகளுக்கும் ஒவ்வொரு முறையும் 30 பைசா முதல் ஒரு ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநில மின்சாரத்துறை அமைச்சர் வி.சுனில் குமார் கூறுகையில், மின் கட்டணம் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். மின் கட்டணத்தை மறு வரையறை செய்யும் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொஞ்சம் சலுகைகள் கொடுப்பதில் தவறில்லை. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு மக்களுக்கு கட்டணக் குறைப்பை செயல்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.