நண்பரால் தாக்கப்பட்ட வாலிபர் ஒரு மாதத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவம்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். அதேபோல் அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்கிற லோகேஷ்.  இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். 

இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி திருத்தணி பேருந்து நிலையம் அருகில் உள்ள கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு, மது போதையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஒரு வாலிபரின் செல்போன் மற்றும் ரூ.500 பணத்தை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர். 

அதில், குமரேசன் செல்போனை அந்த வாலிபரிடமே திரும்பி கொடுத்ததால் குமரேசன் மற்றும் ஜெகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த குமரேசன் அருகில் உள்ள கடையில் இருந்த கரண்டியை எடுத்து, ஜெகனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் அருகில் இருந்த கடாயை எடுத்து குமரசேன் தலையில் பலமாக தாக்கி உள்ளார்.

இதனையடுத்து குமரேசன் ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் ஒரு மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் அதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.