பல நகரங்களில் தளர்வுகள் அறிவிப்பு| Dinamalar

பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் ஷாங்காய் நகருக்கும் பரவியது. இதை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடப்பதை அதிபர் ஜின்பிங்கும் ஒப்பு கொண்டார். 3 ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜின்பிங் கூறியதாக தகவல் வெளியானது. அமைதியான வழியில் நடக்கும் மக்களின் உணர்வுகளுக்கு சீன அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு அளுங்கட்சி பணிந்துள்ளது. பெய்ஜிங், தினஜின், செங்கு மற்றும் ஷென்ஜென் உள்ளிட்ட ஏராளமான நகரங்களில் கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இங்கு பொது போக்குவரத்தில் பயணிக்க கோவிட் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை திரும்ப பெறப்பட்டது.

செங்டு மற்றும் குவாங்சு நகரங்களில் வசிப்பவர்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது, கோவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியம் இனியில்லை.

அதேபோன்று பீஜிங்கிலும், பஸ் மற்றும் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்களில் கடந்த 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் சான்று அவசியம் என்ற உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை தொடர்ந்து உள்ளது.

பீஜிங்கில், வணிக வளாகங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் அங்கு அமர்ந்து சேவை பெறும் வசதிகள் அனுமதிக்கப்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.