“ரூ.1,600 கோடியைத் தாண்டும் உண்டியல் வருமானம்" திருப்பதியில் அதிகரித்த பக்தர்களின் வருகை!

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்யும் தலமாக திருப்பதி விளங்குகிறது. அப்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். ஏழை, நடுத்தர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

திருமலை திருப்பதி

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைந்தது, இதனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கோவில் உண்டியல் வருமானமும் குறைந்தது.

கொரோனா பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, அடுத்து வந்த 2020-21 நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடியும் திருப்பதியில் காணிக்கை வருமானம் கிடைத்தது.  கொரோனா பரவல் குறைந்த நிலையில் இப்போது கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த நிதி ஆண்டின் கடந்த 8 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனால் இந்த 8 மாதத்தில் மட்டும் உண்டியல் வருமானமாக ரூ.1,161.74 கோடி சேர்ந்துள்ளது.

திருமலை திருப்பதி

தொடர்ந்து 9வது மாதமாக உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டி வருகிறது. நவம்பர் மாதம் உண்டியல் வருமானம் ரூ.127.30 கோடி வந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நிதி ஆண்டில் உண்டியல் வருவாய் ரூ.1600 கோடியைத் தாண்டும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் ஒருவர் கூறுகையில், கொரோனா காலங்களில் வர முடியாத பக்தர்கள், அவர்களின் காணிக்கையை சேர்த்து வைத்து இப்போது செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அதிகளவு காணிக்கையை இப்போது திருப்பதியில் செலுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்,  

1950 -ம் ஆண்டு வரை ஏழுமலையான்னுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958 -ம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது. 1990–ம் ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உண்டியல் வருமானம் வந்தது. அடுத்து ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகவே வருகிறது.

2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1-ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் உண்டியல் வருமானம் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியுள்ளது.

திருமலை திருப்பதி

2015-16-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ரூ.1,000 கோடியைத் தாண்டியது. 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.  கொரோனா பாதிப்பால் பக்தர்கள் வருகை குறைந்ததால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வருமானம் வெகுவாகக் குறைந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடியும்.  நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து 9 வது மாதமாக திருப்பதியில் உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகையாக ரூ.15,938 கோடியும், தங்கம் கையிருப்பு 10,258 கிலோவுக்கும் அதிகமாக உள்ளது. பக்தர்களின் வருகையை அதிகமாவதை கருத்தில் கொண்டு திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் வசதி, அன்னதானம் மேலும் தேவையான அடிப்படை வசதிகளை அதிகரித்துள்ளோம், என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.