ம.பி: பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்; காங்கிரஸ் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி ஆசிரியரொருவர், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டதாதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 24-ம் தேதியன்று, கனஸ்யாவில் உள்ள பழங்குடியினர் விவகாரத் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே என்பவர், பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டிருந்தார்.

சஸ்பெண்ட்

இந்த விஷயம் தெரியவரவே, அடுத்த நாளான நவம்பர் 25 அன்றே, அரசியல் கட்சியால் நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்துகொண்டதன் மூலம் ராஜேஷ் கண்ணோஜே சேவை நடத்தை விதிகளை மீறினார் என பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் என்.எஸ்.ரகுவன்ஷி, “முக்கியமான வேலையைக் காரணம் காட்டி அவர் விடுப்பு கோரியிருந்தார், ஆனால் அவர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் கே.கே.மிஸ்ரா – ம.பி

ராஜேஷ் கண்ணோஜே மீதான இந்த இடைநீக்க உத்தரவு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், காங்கிரஸ் தற்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் கே.கே.மிஸ்ரா, “சிவராஜ் சிங் சௌஹான் அரசாங்கம், ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் ஷகாக்களில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது. ஆனால், அரசியல் சார்பற்ற அணிவகுப்பின்போது ராகுல் காந்திக்கு வில் மற்றும் அம்பு பரிசளித்ததற்காக, ராஜேஷ் கண்ணோஜே எனும் பழங்குடியினத்தவரை இடைநீக்கம் செய்திருக்கிறது” என ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.