வருவாய் புலனாய்வு குழு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: தங்க கடத்தல் சகோதரர்கள் சிக்கியது எப்படி?

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்தி வருவதாக திருச்சி புலனாய்வு இயக்குநராக குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என அனைத்து வாகனங்களையும் போலீஸார் உதவியுடன் புலனாய்வு குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் கைப்பையில் ஐந்து கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பதை கண்டறிந்து, அவரைப் பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

சோதனை நடைபெற்ற வீட்டின் முன்பு கூடி இருந்த பொதுமக்கள்

அதில் இந்த தங்கக் கடத்தலுக்கு பின்புலமாக அவருடைய தம்பி நூருல் அமீன் இருப்பது தெரியாவந்தது. அதனைத் தொடர்ந்து கலீல் ரஹ்மானை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள மரக்காயர் பட்டணம் கடற்கரை கிராமத்தில் உள்ள நூருல் அமீன் வீட்டிற்கு வருவாய் புலனாய்வு இயக்குநராக குழுவினர் அழைத்து வந்துள்ளனர். தகவல் அறிந்து நூருல் அமீன் தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் வீட்டில் இருந்த அறைகளில் சோதனை நடத்தியபோது ஒரு அறையில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்துள்ளன.

இதையடுத்து இன்று அதிகாலை மண்டபம் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கலீல் ரகுமான் உறவினர் முகமது சுனைன் ஆகியோர் முன்னிலையில் பூட்டப்பட்டிருந்த அறைகளின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்கள், லேப்டாப் மற்றும் செல்போன்களை வருவாய் புலனாய்வு குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றிய பொருள்களை எடுத்து செல்லும் வருவாய் புலனாய்வு குழுவினர்

தொடர்ந்து அந்த வீட்டிலேயே கலீல் ரகுமான் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றிய பொருள்களுடன் கலீல் ரகுமானை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய நூருல் அமீன் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தி சென்றனர்.

மரக்காயர் பட்டணம் கடற்கரை கிராமத்தில் உள்ள நூருல் அமீன் வீட்டில் வருவாய் புலனாய்வு குழுவினர் சோதனைகளில் ஈடுபட்டு வரும் தகவல் அறிந்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரம் அருகே வேதாளை கடற்கரை கிராமத்தின் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக தண்ணீர் கேன்களில் அடைத்து உரம் என கொண்டு செல்லப்பட்ட மர்ம பவுடரை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தி.மு.க கவுன்சிலரையும் அவரது சகோதரரயும் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்டது போதைப்பொருள்தான் என தமிழக முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேதாளை கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மரக்காயர் பட்டணம் கடற்கரை கிராமத்தில் தங்கக் கடத்தலில் சகோதரர்கள் இருவர் ஈடுபட்டிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. வேதாளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடப்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.