PMAY : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடா? – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சமீபகாலமாக இந்த திட்டத்தை பயன்படுத்தி பலரும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் வீடுகள் கட்டாமலேயே கட்டப்பட்டதாகக் கூறி அதிகாரிகள் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அரியலூரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

மோடி

அதில், “அரியலூர் மாவட்டத்தில் ‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்’ கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் கையாடல் செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே, இதில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கத் தேவையில்லை” எனக் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல், தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் கையாடல் நடப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதைத் தீவிரமாகக் கருத வேண்டும். எனவே இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இது போன்று விதிமீறல்களில் ஈடுபட்டு தகுதியற்ற நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்திற்கு இணையான அதிகாரியை நியமிக்க வேண்டும். சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜெயராம் வெங்கடேசன்

இது குறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “பெரும்பாலான இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள், அவர்களுக்குத் தேவையான ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள். குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கு வழங்குவது இல்லை. சில இடங்களில் வீடு கட்டாமலேயே கட்டியதாகப் பணம் பெற்று முறைகேடு செய்கிறார்கள்.

இரண்டு வீடுகள் கட்டியும் முறைகேடு செய்கிறார்கள். இதையும் தாண்டி ஒருவருக்கு வீடு வேண்டும் என்று சொன்னால், ரூ.20,000-மாவது லஞ்சம் கொடுக்காமல் நடப்பது இல்லை. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் சொன்னதன் அடிப்படையில், அரசு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. இதில் அரசு தன்னிச்சையாக ஒரு தணிக்கை நடத்த வேண்டும். முறைகேடு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அப்போதுதான் பயம் வரும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.