“பாஜக-வினரிடமிருந்து தப்பிக்க 3-4 மணி நேரம் ஓடிக்கொண்டே இருந்தேன்”-மீட்கப்பட்ட காங். MLA

குஜராத்தில் நேற்று மாலை முதல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே இதுகுறித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் சமூகவலைதளங்களில் தான் நேற்று பாஜக-வை சேர்ந்த சிலரால் துரத்தப்பட்டதாகவும், போராடி தப்பித்து வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று இரவு முழுக்க காட்டில் ஒளிந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அவரது பதிவு வைரலாகி வரும் நிலையில், பாஜக தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை.
இன்று குஜராத்தில் 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள தாண்டா தொகுதியில் காந்தி என்பவர் போட்டியிடுகிறார். அவர், தனக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் லது பார்கி என்பவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். தனது அந்த எப்.ஐ.ஆர்-ல், தன்னை பாஜக-வை சேர்ந்த லது பார்கி மற்றும் அவரது குண்டர்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தான் காட்டுக்குள் ஒளிந்திருக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். `ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து, மருத்துவமனையில் சென்று சேர்ந்தேன்’ என்றும் அவர் எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகின்றன.
image
இதுதொடர்பாக அவர் வட இந்திய ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “நேற்று இரவு 9.30 மணியளவில் பாஜக வேட்பாளர் மற்றும் அவரது 150 குண்டர்களால் கத்தி போன்ற ஆயுதங்களால் நான் தாக்கப்பட்டேன். கொஞ்சம் விட்டிருந்தால், அவர்கள் என்னை கொலையே செய்திருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க நான் பக்கத்திலிருந்த காட்டுக்குள் சுமார் மூன்று – நான்கு மணி நேரத்துக்கு ஓடினேன். நான் ஓடி மூன்று – நான்கு மணி நேரம் கழித்து போலீஸ்காரர்கள் என்னை கண்டுபிடித்தனர்” என்றுள்ளார்.
image
மேலும் அவர் பேசுகையில், “பாஜக-வினர் என்னை துரத்தியபோது, நான் என் வாக்காளர்களிடம் ஓடி உதவிகேட்க முயற்சித்தேன். அப்போது அந்த குண்டர்களின் கார் என்னுடைய கார்-ஐ வழிமறித்துவிட்டது. அவர்கள் அங்கு நின்றுக்கொண்டு, என் கார் நகரக்கூட முடியாமல் தடுத்துவிட்டனர். கார்-ஐ திருப்ப முயல்கையில், வேறொரு கார் எங்களை தடுத்துவிட்டது. இதனால் காரிலிருந்து இறங்கி ஓடினோம். சுமார் 10 – 15 கி.மீ ஓடிக்கொண்டே இருந்தேன் நான்” என்றுள்ளார்.
image
இதுபோன்ற நடவடிக்கைகள் தனக்கு நிகழுமென தனக்கு முன்னரே தெரியும் என்றும், இதையொட்டியே தேர்தல் ஆணையத்திடம் தான் பாதுகாப்பு கோரியதாகவும் கூறி, தனது புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்ததற்காக சாடியுள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான காந்தி.
முன்னதாக நேற்று இரவு இவர் காணாமல் போனதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் போட்டிருந்தார். அதில் அவர், “காங்கிரஸ் பழங்குடியின தலைவரும், தாண்டா சட்டமன்ற வேட்பாளருமான காந்திபாய், பாஜக குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இப்போது காணவில்லை. தேர்தல் கமிஷனிடம், காந்திக்கு கூடுதலாக துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் கமிஷன் அதை தாமதப்படுத்தியது.

कांग्रेस के आदिवासी नेता और दांता विधानसभा प्रत्याशी, श्री कांतिभाई खराडी पर BJP के गुंडों ने जानलेवा हमला किया और अब वो लापता हैं।

कांग्रेस ने EC के अतिरिक्त अर्धसैनिक बल की तैनाती की मांग की थी, मगर आयोग सोया रहा।

भाजपा सुन ले – न डरे हैं, न डरेंगे, डट कर लड़ेंगे। #DaroMat
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2022

கேட்டுக்கொள்ளுங்கள் பா.ஜ.க-வே… எங்களுக்கு பயமில்லை. பயப்படவும் மாட்டோம். கடுமையாக போராடுவோம்” என தெரிவித்திருந்தார். இதேபோல குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜிக்னேஷ் மேவானியும் கருத்து தெரிவித்திருந்தார்.
image
இந்நிலையில் இன்று எம்.எல்.ஏ காந்தி தான் போராடி மீண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ ஒருவரே கடத்தப்பட்டதாக தெரிவித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை கொடுத்துள்ளது. இன்று நடைபெறும் தேர்தலை கணக்கில் கொள்ளக்கூடாது என்றும், மறுதேர்தல் வேண்டுமென்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கையும் விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.