முஸ்லிம்களைப் போல இந்துக்களும் 18-22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்: ஏஐயுடிஎஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து

புதுடெல்லி: பெண்களுக்கு 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய பார்முலாவுக்கு இந்துக்களும் மாற வேண்டும். அப்போதுதான் குழந்தைப்பேறு எளிதாக இருக்கும் என்பதுடன் பெற்றோரும் தங்களது இளம் வயதிற்குள்ளாகவே தங்களது பிள்ளைகளுக்கும் வசதியாக திருமணம் நடத்தி வைக்க முடியும் என அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது. இஸ்லாமிய வழக்கப்படி ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று பெண்களுக்கும் அரசு அனுமதித்துள்ள 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மறுபக்கம், அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையை அனுபவித்து பணத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

40 வயதில் என்ன… பெற்றோரின் நிர்பந்தத்தால் 40 வயதுக்குப்பிறகு அவர்கள் முறைப்படியான திருமணத்தை செய்து கொள்கின்றனர். 40 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பார்கள். நிலத்தில் சரியான நேரத்தில் விதைக்கும் போதுதான் நல்ல வளர்ச்சியையும், விளைச்சலையும் எதிர்பார்க்க முடியும்.

இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதற்கு ஆண்கள் (20-22 வயது) மற்றும் பெண்களுக்கு (18-20 வயது) இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பதுதான் காரணமாக இருக்க முடியும். இந்துக்களும் இஸ்லாமிய பார்முலாவைப் பின்பற்றி திருமணம் செய்ய வேண்டும். அப்போது பாருங்கள் அவர்கள் எத்தனை குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள் என்பதை. இவ்வாறு அவர் கூறினார்.

ஷிரத்தா வாக்கர் கொலை வழக்கில் ‘‘லவ் ஜிகாத்’’ நடைபெற்றதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து பத்ருதீன் பதிலளிக்கையில் ‘‘அசாம் முதல்வர் இன்று நாடறிந்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். அவர் எது வேண்டுமானாலும் பேசலாம் யார் தடுப்பது. நீங்களும் நான்கைந்து ‘‘லவ் ஜிகாத்’’ நடத்தி எங்கள் முஸ்லிம் பெண்களை தூக்கிச் செல்லுங்கள். அதை நாங்கள் வரவேற்போம். சண்டையிடமாட்டோம். உங்களுக்கு எவ்வளவு சக்தியிருப்பது என்பதும் அப்போதுதான் தெரிய வரும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.