கார்த்திகை தீபத் திருநாள்: திருவண்ணாமலையில் கோலாகலம்!

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும் பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணிகள், கிரிவலப்பாதையில் தூய்மை பணிகளும் நடைபெற்றன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் ஆய்வு செய்தார். ராஜகோபுரம் முன்பாக கிரிவலப் பாதை தூய்மைப்படுத்தும் பணிகளை அப்போது அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் போது செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று (டிசம்பர் 6) ஏற்றப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.

மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திருவண்ணாமலையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அனுமதிச்சீட்டு இருக்கும் பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.