குரு, சுக்கிரர் போன்றவர் அஜித் : வினோத் எக்ஸ்குளுசிவ் பேட்டி

''அஜித்தின் பார்வை குரு, சுக்கிர பார்வை போன்றது. அது என் மீது மட்டுமின்றி பலர் மீது பட வேண்டும்,'' என இயக்குனர் வினோத் கூறினார்.

மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது.

துணிவு பட இயக்குனர் வினோத் தினமலருக்கு அளித்த எக்ஸ்குளுசிவ் பேட்டி: 'துணிவு' படம், பஞ்சாப் வங்கி கொள்ளையை பின்னணியாக கொண்டது என நிறைய தவறான தகவல்களே பரவி வந்துள்ளன. அது எதுவும் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அயோக்கியர்களின் ஆட்டமே இப்படம்.அதற்காக வில்லன்கள் அதிகமுள்ள படம் என்று நினைக்க வேண்டாம். அயோக்கியத்தனமான உலகில் நடக்கும் ஒரு கதை.

அஜித்துடன் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியே. எந்த ஒரு நாயகனின் படம் என்றாலும் நமக்கு அழுத்தம் இருக்கும். அதிலும், விஜய், அஜித் படம் என்றால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக அழுத்தம் இருக்கும். சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவும், மற்ற படங்கள் மற்றும் நாயகர்களின் ஒப்பீடும் இருக்கும். பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும். படம் வெளியாக வரவேற்பை பெறும் வரை அழுத்தம் குறையாது.

மஞ்சுவாரியார் இப்படத்தில், அஜித்தின் கூட்டாளிகளில் ஒருவராக வருகிறார். ஜோடியாக அவர் நடிக்கவில்லை. வலிமை மாதிரியான பெரிய ஆக்சன் காட்சிகள் துணிவு படத்தில் உண்டு. கதைக்கு அவசியமானதும் கூட. இதுவரை யாரும் கடலில் 'சேசிங்' காட்சி வைத்தது இல்லை. இப்படத்தில் அட்டகாசமான சேசிங் காட்சி துணிவு படத்தில் உண்டு.

'நேர்கொண்ட பார்வை' படத்தை பொருத்தவரை, 'என் சிறந்த படம்' என அஜித்தே கூறியுள்ளார். அவருக்கான ரசிகர்கள் வட்டத்தை விரிவடைய வைத்த படம் அது. தயாரிப்பாளருக்கும் லாபமாக அமைந்த படம்.

அஜித்துடன் மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மறுக்க முடியுமா. ஆனால் அதை அஜித் சார் முடிவு செய்ய முடியும். நிறைய உதவி இயக்குனர்கள் கதையோடு காத்திருக்கின்றனர். அஜித்தின் பார்வை அவர்கள் மீதும் விழ வேண்டும். அஜித்தின் பார்வை குரு, சுக்கிரர் பார்வை போன்றது. தொடர்ச்சியாக ஒரே இயக்குனர், அஜித் படத்தை இயக்குவதை காட்டிலும், புது இயக்குனர்கள் அஜித் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும். அப்போது தான் புதுப்புது விஷயங்களும் வெளியாகும்.

படங்களின் வெற்றி தோல்வி, ரசிகர்களுடன் கனெக்ட் ஆவதில் தான் இருக்கிறது. சின்ன பட்ஜெட் படத்திற்கு ஒரு வியாபாரம் உண்டு. இதில் 'ரிஸ்க்'கும் உண்டு. அஜித், விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து உருவாகும் 150 கோடி ரூபாய் பட்ஜெட் படத்திற்கு, நஷ்டமே வராது. அவர்கள், 30 ஆண்டு உழைப்பில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்குண்டான வியாபாரத்தில் நஷ்டமே இருக்காது.

'ரிஸ்க்' எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், எந்த நடிகரையும் வைத்து, கதை மேல் நம்பிக்கை வைத்து படம் எடுப்பர். எனக்கு 'ரிஸ்க்' வேண்டாம். பிரபலமான நடிகரை வைத்து படம் எடுக்கிறேன். அதில் சம்பாதிக்கவில்லை என்றாலும் நஷ்டம் வராது என நினைக்கும் தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களையே நாடுவர்.

இவ்வாறு வினோத் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.