செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: பாஜகவுக்கு கடிவாளம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி மோதலில் பிஸியாகிவிட ஆளும் திமுக அரசை எதிர்த்து களமாடும் வேலையை அக்கட்சி பல நேரங்களில் செய்யத் தவறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். எனவே பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. திமுக அரசை, அமைச்சர்களை அவ்வப்போது பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிலும் பாஜகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சட்டமன்றத் தேர்தல் சமயத்திலிருந்தே கடும் வார்த்தை மோதல் நிலவி வந்தது.

அவரைத் தொடர்ந்து பாஜகவினர் பலரும் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட்டனர். இந்த அவதூறு விவகாரம் நீண்டு கொண்டே சென்ற நிலையில் நீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி.

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை பரப்புவதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது குற்றம்சாட்டி, அதுபோல பேச தடை விதிக்கக்கோரி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிர்மல் குமார் தாக்கல் செய்த பதில்மனுவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி வழக்கு குறித்து டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதுவரை செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.