பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சீராய்வு மனு தாக்கல்| Dinamalar

புதுடில்லி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க., சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ௨௦௧௯ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இது, ௧௦௩வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் என்றழைக்கப்படுகிறது.

௩:௨

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நவ., ௭ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதில், ௩:௨ என்ற விகிதத்தில் நீதிபதிகள் அளித்த பெரும்பான்மை தீர்ப்பில், இந்த சட்டத் திருத்தம் செல்லும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இட ஒதுக்கீடு தொடர்பான இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, முற்பட்ட பிரிவினரை, ‘பிற்படுத்தப்பட்ட பிரிவினராக’ அங்கீகரிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்திரா சஹானி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம், முன்னேறிய பிரிவினரில் பெரும்பாலானோருக்கு சொகுசு சலுகை வழங்கும் வகையில் உள்ளது.

இந்தப் பிரிவினர், சமூகத்திலோ, வேலைவாய்ப்பு அல்லது தேசிய நீரோட்டதிலோ புறக்கணிக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பதற்கான எந்த விளக்கமும், வரையறையும் இதில் வகுக்கப்படவில்லை.

இந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரத்தில் என்ற வார்த்தை, பின்தங்கிய பிரிவினர் என்ற வார்த்தையுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

ஆனால், அரசியல் சாசனத்தால் பின்தங்கியோர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள எஸ்.சி., – எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் இதில் சேர்க்கப்படவில்லை.

புள்ளிவிபரங்கள் இல்லை

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் என்பதற்காக முற்பட்ட வகுப்பினரை, பின்தங்கிய பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த சட்டத் திருத்தம், சின்ஹா கமிட்டியின் அறிக்கையை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில், இதற்கான போதிய புள்ளிவிபரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.