கண்டி நகரத்தில் வளிமாசடைவு – முகக்கவசம் அணிவது நோய்களைத் தடுக்கும்

மத்திய மாகாணம் அடங்கலாக நாட்டின் பல பாகங்களில் நிலவும் குளிரான காலநிலைக்குக் காரணம், வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (8)  கண்டியில் வளிமண்டல வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. இன்று மாலைக்குப் பின்னர், நிலைமை சீரடைந்து விடலாம் என கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவிற்குப் பொறுப்பான பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

இன்று பகல் எமது நிலையத்திற்குக் கருத்து வெளியிட்டபோது, சராசரி வளித் தரச் சுட்டெண் 150 ஆக இருந்ததென திரு. பிரேமசிறி தெரிவித்தார். இது சிறுபிள்ளைகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் போன்ற உணர்திறன் மிக்கவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை என்பதால், இத்தகையோர் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சுவாச நோய் நிபுணர் டொக்டர் துஷ்யந்த மெதகெதரவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்டி நகரத்தில் வளிமாசடைந்திப்பதால், அந்நகருக்குள் அனாவசிய நடமாட்டத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். முகக்கவசம் அணிவது நோய்களைத் தடுக்கும் என டொக்டர் மெதகெதர கூறினார். சடுதியான காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து, சுவாசக் கோளாறுகளுடன் அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொவிட், இன்புளுவென்ஸா போன்றவற்றைத் தாண்டி, பக்டீரியா தொற்றுக்களும் தீவிரம் பெற்றுள்ளன. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுவாச நோய் நிபுணர் டொக்டர் துஷ்யந்த மெதகெதர கேட்டுக்கொண்டார்.

Sri Lanka Broadcasting Corporation

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.