யாருக்கு அரசாங்க உதவி வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு விஜயம் –

யார் யாருக்கு  அரசாங்க உதவி கிடைக்கப் பெற வேண்டும் என வீடு வீடாகச் சென்று அரசாங்க அதிகாரிகளினால் ஆராய்ந்து வருவதாக   நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த  கருத்துக்களுக்கு  விளக்கமளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது நிவாரண உதவிகளைக் கோரி சமூக நலன்புரி அமைச்சிற்கு 34இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததுடன், அரசாங்கம்   மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து இந்த உதவியை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். 

இதேவேளை 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நிதிஅமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய கலந்துகொண்டு உரையாற்றுகையில் ,அரசாங்கம் சரியான பொருளாதார பாதையில் நகர்ந்து வருவதாக  தெரிவித்தார்.

தற்சமயம் எரிபொருள், கேஸ் என்பனவற்றிற்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. மின்சாரத் துண்டிப்பு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. சவால்மிக்க நேரத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சி முன்வரவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலீடுகளை கவர்ந்திழுப்பது அவசியம் என்றும், இதற்காக சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். துறைமுக நகரின் பணிகள் தற்சமயம் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தை கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் வரிச் சுமையினால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இதுபற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

நீர் மற்றும் காற்று மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகவும் மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்த செயற்றிட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகும். மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரும் வகையிலான போலிச் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மின்சார சபை 18 நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன் மூலம் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. நீர் மின்சார உற்பத்தியிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.