உதயநிதியிடம் சிக்கிய எடப்பாடி; எங்கே போய் முடியுமோ தெரியல!

அதிமுக தலைமை பதவியை குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி மற்ற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் 2 பேரின் ஆதரவாளர்களும் தங்களது அணியை திரட்டிக்கொண்டு ஏட்டிக்கு போட்டியாக அரசியல் செய்து வருகின்றனர்.

இந்த களேபரத்துக்கு மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னை நீக்கம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியதோடு, உடனடியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து அதிமுகவில் புயலை கிளப்பினார்.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி தனக்கு நீதி வழங்குமாறு ஓ.பன்னீர்செல்வம் முறையிட்டார். இந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே உள்கட்சி மோதல் காரணமாக ஏற்கனவே சசிகலா, டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்று, அதிமுக 4 கூறுகளாக பிரிந்து கிடக்கிறது.

இந்த நிலையில் இதே பிரச்சனையை காரணம் காட்டி கோவை செல்வராஜ் போன்ற முக்கிய நிர்வாகிகள் கட்சியைவிட்டு வெளியேறி திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நகரத்தொடங்கிவிட்டனர்.

இந்த பரபரப்பான சூழலில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 1000க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியும், அதில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் பிற கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படுகிறது. மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே முக்கிய அமைச்சர் பதவிகளை கொடுத்து இருக்கின்றனர்.

ஆட்சியில் சம்பாதித்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற உதயநிதி திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளில் கமிஷன் பெறும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

திமுகவின் திரைத்துறை ஆதிக்கத்தால் 150க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்ட திட்டம் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அதிமுக கொண்டு வந்த காரணத்திற்காக அந்த பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக தற்போது செயல்படுத்தி வருகிறது.

மாண்டஸ் புயலால் பாதிப்பு இல்லை. ஆனால், இதில் சிறப்பாக செயல்பட்டதாக திமுக அரசு பொய் சொல்லி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வெல்வோம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.