அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டில் நடமாட முடியாது… விசிக மிரட்டல்!

கடந்த 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர், அம்பேத்கர் நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமப்பொட்டு , காவி உடை அணிந்தது போன்ற புகைப்படங்களை அச்சிட்டு போஸ்டர்களை ஒட்டினர்.

இது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் , சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் அமைந்ததாலும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் , திமுக , மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், அம்பேத்கருக்கு காவி சாயம் பூச முயலும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் சங்கபரிவார் , ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

முன்னதாக விசிகவினர் 50க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்தும், திருவள்ளுவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோருக்கு காவி சாயம் பூசுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக , ஆர்.எஸ்.எஸ் , அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு எதிராக விசிகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து விசிகவின் தேனி , திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக தலைவர்களுக்கு தொடர்ந்து காவிச்சாயம் பூசும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ்நாட்டில் நடமாட முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது, தமக்கு பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது,உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம்’ என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மேலும், ‘அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன்’ எனவும் அந்த உத்தரவாத கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் தமது உத்தரவாத கடிதத்தில் அர்ஜுன் சம்பத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.