காரில் ஏன் தொங்கியபடி சென்றேன்? மேயர் ப்ரியா பளீச் பதில்!

மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சென்னை மேயர் ப்ரியா, முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேயர் ப்ரியா மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் முதல்வர் கான்வாய் வாகனத்தில் ஓடிச்சென்று ஏறி தொங்கியபடி பயணம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேயர் பொறுப்பில் உள்ள ப்ரியா, ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றதை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றது ஏன் என்பது குறித்து மேயர் ப்ரியா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து மேயர் ப்ரியா கூறுகையில், “காசிமேட்டில் இரண்டு இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்துச்சு. ஓரிடத்தில் இன்பெக்‌ஷன் முடிஞ்சதும் இன்னோர் இடத்திற்கு முதலமைச்சருக்கு முன்னாடியே போய் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். அந்த ரெண்டு இடங்களுக்கும் தொலைவு அதிகமானதாக இருந்தாலும் நான் நடந்துதான் போய்கிட்டிருந்தேன். அப்போது, கான்வாய் வந்து கொண்டிருந்ததால் அதிலேயே போயிடலாம் என்று எண்ணித்தான் அவ்வாறு சென்றோம்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயம் கான்வாயில் அவ்வாறு செல்லுமாறு யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள மேயர் ப்ரியா, ஆனா, இது இவ்வளவு சர்ச்சையாகும் என தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும்.” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். மேலும், ஆய்வின் போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் ஏறியதாகவும் அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.