சின்னவர் அல்ல, சின்ன கலைஞர்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு..!

என்னைப் பொருத்தவரை, உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்பதைவிட சின்ன கலைஞர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 14-ம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதலமைச்சராக முடியாது. அவர் ஜாதகத்திலேயே அந்த அம்சம் இல்லை என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் சிலர் பேசினார்கள். ஆனால், அந்த ஜோசியங்களையெல்லாம் பொய்யாக்கி, இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

இன்று திண்டிவனத்திலிருந்து சொல்கிறேன், திமுகவுக்கு அடுத்த ஐந்தாறு தலைமுறைக்கு தலைவரை உருவாக்கிவிட்டோம். அதன் அடிப்படையில் பூரிப்போடு சொல்கிறேன், நூற்றாண்டு காலமாக இந்த திராவிட இயக்கத்தை நாம் வளர்த்து வருகிறோம். இனி 100 ஆண்டு காலம் வாழ்வதற்காக, இயக்கமும் வளர்ச்சி அடைவதற்காக, ஆட்சியும் பலமாக இருப்பதற்காக ஸ்டாலின் இறுதிமூச்சு வரையிலும் முதலமைச்சராகவே இருப்பார். இதுதான் நான் சொல்கிற ஜாதகம், ஜோசியம்.

நானும் ஜோசியக்காரன்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் என்னை உற்றுப்பாருங்கள். எனக்கு கருநாக்கு தான். கட்சித் தலைவருக்கு, முதலமைச்சருக்கு ஜாதகம், ஜோசியம் பார்த்து கணிப்பவர்களுக்கு பதில் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இப்போது பாருங்கள், உதயநிதி ஸ்டாலினை பற்றிப் பேசுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினை ‘வாங்க வாங்க உட்காருங்க, அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறி அமர்த்திவிடவில்லை. அவர் பிறப்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா..?. என்னைப் பொருத்தமட்டில், அவரை சின்னவர் என்பதைவிட, சின்ன கலைஞர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.