இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் : தென் ஆப்பிரிக்காவை எளிதில் சுருட்டி ஆஸ்திரேலியா அபார வெற்றி…!

பிரிஸ்பேன்,

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் திணறினர். ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்ததால் பந்து வேகத்துடன் நன்கு பவுன்ஸ் ஆனதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய பவுலர்கள், தென்ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்சில் 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர்.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியும், தென்ஆப்பிரிக்க வீரர்களின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியால் 100 ரன்களை கூட எட்ட முடியாமல் போனது. அந்த அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 34 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களம் புகுந்த ஆஸ்திரேலிய அணியும் முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 2 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும், ஸ்மித் 6 ரன்னிலும், ஹெட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதை பயன்படுத்த தவறிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் 19 எக்ஸ்டிராக்களை தாரை வார்த்தனர். இல்லையெனில் ஆட்டம் இன்னும் பரபரப்பாக சென்றிருக்கும்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.