பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள அணு ஆயுத நாடு; அந்தர்பல்டி அடித்த பெண் மந்திரி

லாகூர்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தானை சாடி பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால், குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடை விதிக்கப்பட்டது என கூறினார்.

பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்றார். அவரது இந்த சர்ச்சை கருத்து இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க. சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் மந்திரியான ஷாஜியா மர்ரி, லாகூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது. இதனை இந்தியா மறந்து விடக்கூடாது.

எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க போவதில்லை. தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சமபலத்துடன் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புப்படுத்துகிறது என்று கூறினார்.

இந்நிலையில், பிலாவல் பூட்டோவை பாதுகாக்கும் வகையில் ஷாஜியா இன்று பேசியுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள அணு ஆயுத நாடு. இந்தியாவில் உள்ள சில ஊடகவாசிகள், அச்சமுண்டாக்க முயலுகின்றனர்.

இந்திய மந்திரியின் தூண்டி விடும் கருத்துக்கு பூட்டோ பதிலளித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் கூடுதலாக தியாகம் செய்துள்ளது என தெரிவித்து உள்ளார். இதுதவிர, மோடி அரசு பயங்கரவாத செயல் மற்றும் பாசிசம் போக்கை ஊக்குவிக்கிறது என்றும் பதிவிட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.