நான் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா?: கருத்துக்கணிப்பை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்,

டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தனது சமீபத்திய டுவிட்டில் ‘டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். மேலும், கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக, அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு முடக்கியது.

டுவிட்டரின் இத்தகைய செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர், தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 2 கோடியே 20 லட்சம் பங்குளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.29 ஆயிரத்து 743 கோடி) கடந்த 3 நாட்களாக விற்றது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், தொடர்ச்சியாக டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்தார்.

இத்தகைய சூழலில் தான் அவர் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை தொடங்கியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த கேள்விக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்பதையும் கிளிக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.