பிபா கால்பந்து போட்டியின் தாக்கம்: கேரளாவில் பரவிய வன்முறை, போலீசாரை தாக்கிய ரசிகர்கள்

திருவனந்தபுரம்,

கேரளாவில் கால்பந்து போட்டிக்கான ரசிகர்களுக்கு பஞ்சமேயில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீவிர கால்பந்து ரசிகர்களாக உள்ளனர். இதனால், கேரளாவில் பல பகுதிகளில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்டேடியங்களில் பெரிய திரைகளில் கால்பந்து போட்டிகளை காண்பதற்கு பல வசதிகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின. இதில் அனல் பறந்த ஆட்டத்தில், கூடுதல் நேரம் உள்பட இரு அணிகளும் 3-3 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. பின்பு பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதும், கேரளாவின் பல பகுதிகளில் நேற்று வன்முறை பரவியது. இதில், போட்டி அணிகளின் ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதி கொண்டார்கள். கண்ணூர் பகுதியில் நடந்த மோதலில் இளைஞர் ஒருவருக்கு பலத்த காயமும், 2 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதேபோன்று கொச்சியில், அர்ஜென்டினா வெற்றியை ரசிகர்கள் மதுபானம் அருந்தி கொண்டாடியுள்ளனர். அவர்களை லிபின் என்ற காவல் அதிகாரி தடுத்து உள்ளார். அவரை கும்பலாக சேர்ந்து, சாலையில் இழுத்து போட்டு அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து பொழியூர் பகுதியில் துணை காவல் ஆய்வாளர் சாஜி என்பவரை குடிபோதையில் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்று கேரளாவின் பல பகுதிகளில் வன்முறை பரவியுள்ளது. போலீசாரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.