சீனா கொரோனா பாதிப்பு: லட்சக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு; உலக அளவில் மீண்டும் ஒரு எச்சரிக்கை

பீஜிங்:

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது. பிஎப் 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது. சீனா தற்போது நாடு முழுவதும் பரவி வரும் ஒமைக்கிரானின் மிகவும் பரவக்கூடிய சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது

தற்போதைய மாறுபாட்டிற்கு உட்பட்ட வைரஸ் ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் சராசரியாக 16 பேருக்கு நோயை பரப்புவதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.சீனாவிற்கான தற்போதைய மாறுபட்ட வைரஸ் தொற்றுநோயின் முந்தைய அலைகளை விட அதிகமாக உள்ளது.

கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் சந்திரப் புத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

இறுதி சடங்கு செய்யும் சேவை நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கூறும் போது,

“மீண்டும் கொரோனா பரவலுக்கு பிறகு எங்களது பணிச்சுமை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். தினமும் மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன.

வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள்தான் வரும்” என்றார்.

மேலும் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் உடல்கள் நிரம்பி வழிகின்றன என்று வால் ஸ்ட்ரீப ஜர்னல் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் முற்றிலுமாக நிரம்பி வழிகின்றன.

சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

தலைநகர் பீஜிங்கில் உடல்கள் தகனம் இடைவிடாது நடைபெறுகிறது. பிணவறைகள் அதிக சுமையுடன் உள்ளன. சீன கம்யூனிஸ்டு கட்சியின் தற்போதைய குறிக்கோள், தொற்றால் யார் பாதிக்கப்பட விரும்புகிறார்களோ பாதிக்கட்டும். யார் இறந்து விடுவோம் என்று நினைக்கிறார்களோ இறக்கட்டும் என்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷன் புதிய கணிப்புகளின்படி, சீனாவில் கொரோனா பாதிப்பால் 2023ஆம் ஆண்டுக்குள் 10 லடசத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.