மராட்டியத்தின் பிரச்சினைகளை கண்டுகொள்ள மாட்டோம்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் எல்லை பிரச்சினை குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு பேசியதாவது:-

கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எல்லை பிரச்சினைகள் அரசியல் அமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும். அதனால் மராட்டியம் மாநிலம் தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடத்த வேண்டுமா? என்பது குறித்து சுப்ரீம் கோா்ட்டில் விசாரணைநடக்கிறது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மராட்டிய முதல்-மந்திரி எல்லை விஷயம் குறித்து கருத்து கூறினார். அந்த கருத்துக்கு நான் தக்க பதில் கருத்தை பதிவு செய்தேன். மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்கு வரக்கூடாது என்று கூறி அந்த மாநில அரசுக்கு நமது தலைமை செயலாளர் கடிதம் எழுதினார். மராட்டிய அரசியல்வாதிகள் மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை கூறினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் கர்நாடக அரசியல்வாதிகள் யாரும் மக்களை தூண்டிவிடும் வகையில் கருத்துகளை கூறவில்லை.

மராட்டிய மாநில எல்லையில் வசிக்கும் கன்னடர்களின் நலனை காக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எடுத்த முடிவே இறுதியானது. இதில் மராட்டியம் எழுப்பும் பிரச்சினைகளை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்.இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.