ஸ்ரீவில்லிபுத்தூர்: காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிக்கடி அபராதம் விதிக்கும் காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் செய்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். டாட்டா ஏசி (லோடு வாகனம் )வைத்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சங்குளம் பகுதிக்கு லோடுகள் ஏற்றி சென்ற போது நீதிமன்ற வளாகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இவரது வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

 தன்னிடம் அனைத்து ஆவண நகல்களும் உள்ளதாகவும் தனக்கு எதற்காக அபராதம் விதித்தீர்கள் என காவல்துறையினரிடம் அவர் கேட்டுள்ளார்.

அதற்கு, வாகனத்தின் புக்  (ஆர்சி புக்) இல்லை என தெரிவித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தன்னிடம் அனைத்து நகல்களும் இருக்கும் நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி முழுவதும் தொடர்ந்து காவல்துறையினர் வாகன சோதனை என்ற பெயரில் அடிக்கடி அபராதம் விதிப்பதாகவும், இதனால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அபராதத்தை திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன் வாகனத்தை நிறுத்தி அவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

 ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் வாகன ஓட்டிகள், தொடர்ந்து வாகன சோதனை என்ற பெயரில் அதிகமாக அபராதம் விதிக்கப்படுவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.