இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு

டாக்கா,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்தியாவுக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 55.77 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு அதை வலுப்படுத்த இந்த வெற்றி மிகவும் அவசியமாகும்.

வங்காளதேச அணியை எடுத்துக் கொண்டால் தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. 513 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 324 ரன்னில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. இந்தியாவுக்கு எதிராக எந்த டெஸ்டிலும் வெற்றி பெறாத வங்காளதேசம் முடிந்த வரை கடும் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.

முந்தைய டெஸ்ட் போன்று இந்த ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சுழல் ஜாலம் மேலோங்கி நிற்கும். இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றிருப்பது நினைவு கூரத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.