சென்னை நிர்வாகிகள் கூட்டத்தில் ‘மாஸ்’ காட்டினாரா ஓ.பி.எஸ்? – கொந்தளிப்பின் பின்னணி என்ன?!

“ ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லையாம். நீ தனிக்கட்சி வச்சு நடத்திப்பாரு. உனக்கு தைரியம் இருந்தால் நீ தனி கட்சி நடத்திப் பார். வீதிக்கு வா… வீதியில் வந்து நான் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்லிப்பார். நீ எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது”

“பொதுக்குழுவுக்கு அவர் (எடப்பாடி பழனிசாமி) வரும்போது எட்டு பாயின்டில் அவருக்கு வரவேற்பாம். பெரிய தலைவர் அவரு. கட்சியை வளர்த்தவரு…யாரப்பா நீ… யார் நீ… புரட்சித் தலைவரை நேரே பார்த்து நீ பேசியிருக்கியா, உனக்குத் தெரியுமா வரலாறு”

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த ஓ.பி.எஸ் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை நோக்கி ஓ.பன்னீர்செல்வம் அனலாகக் கக்கிய வார்த்தைகள் இவை. அதிமுக-வில் இரட்டைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நாள்தொட்டு இந்தக் கூட்டத்துக்கு முன்புவரை இவ்வளவு கடுமையான வார்த்தைகளை ஓ.பி.எஸ் பேசியதில்லை. திடீரென ஓ.பி.எஸ் இவ்வளவு கொந்தளிக்கக் காரணம் என்ன?

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

அதிமுக-வில் ஓ.பி.எஸ் அணியின் சார்பில் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில், அலசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார் ஓ.பி.எஸ். அவர் பேசும்போது,

“எத்தனையோ முறை சொல்லி விட்டேன், தம்பி பாதை மாதிரி போன ஊர் வந்து சேராதப்பா-னு… கேக்கணுமில்ல. இந்த நான்கரை ஆண்டுக்காலம் நான் ஏமாற்றப்பட்டேன். ஆனால் இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளை இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கக் கூடியவர்கள் அ.தி.மு.க-வின் தொண்டராகத் தான் இருப்பார். அந்த நிலையை நாங்கள் உருவாக்குவோம். யார் எந்த செயல்திட்டம் போட்டாலும் அதைப் பற்றி கவலை இல்லை. அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவோம்.

ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?..,அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது” என மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் – ஓ.பி.எஸ்

திடீரென ஓ.பி.எஸ் இவ்வளவு ஆக்ரோஷமாகப் பேசக் காரணம் என்ன, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்..,

“எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்துக்கொண்டே இருப்பது. கட்சியினரை பணத்தைக் கொண்டு வளைத்ததைப்போல மற்ற விஷயங்களையும் வளைத்து கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வர நினைக்கிறார் எடப்பாடி. அமைதியான வழியிலேயே பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது என நிர்வாகிகள் அவரிடம் எடுத்துக்கூறினோம். அவர் விஷயம் தெரியாதவர் அல்ல. ஆனால், பொறுமையாக இருப்போம் என எங்களிடம் சொல்லிவந்தார். ஆனால், `ஒரு நல்லவன் கெட்டவன் ஆனால், மிகவும் கெட்டவன் ஆகிவிடுவான், ஒரு கெட்டவன் நல்லவன் ஆனால் மிகவும் நல்லவனாகிவிடுவான்’ என அறிஞர் அண்ணா சொல்லுவார். அவர் மிகவும் நல்லவராக இதுவரை நடந்துகொண்டார். இனி வல்லவனாக நடப்பார். அதேபோல, சாது மிரண்டால் என்ன நடக்கும் என எடப்பாடி தரப்புக்குத் தெரியவேண்டும். இனிவரும் நாள்களில் இதைவிட மாஸான பேச்சுக்களை நீங்கள் பார்க்கலாம். இனி எங்களைச் சமாளிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்” என்கிறார்கள்.

ஜெயக்குமார்

ஆனால், ஓ.பி.எஸ்ஸின் இந்தக் கூட்டம் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பது போட்டி கூட்டம் இல்லை. ‘ஓ.பி.எஸ். பிரைவேட்’ (தனியார் நிறுவனம்) கம்பெனிக்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டம்தான் அது. இது கட்சி கூட்டம் அல்ல. ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து நியமித்தார்கள். அவர்களை வைத்து கூட்டம் நடத்துகிறார்கள். அதிமுகவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவரின் செயல்பாடுகள் ஒருபோதும் அரசியலில் எடுபடாது. அவரிடம் உள்ளவர்கள் அதிமுக-வின் தொண்டர்களே கிடையாது” எனப் பதிலளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.