கொடைக்கானலில் கவனம் ஈர்க்கும் பாரம்பரிய வீடு: சிறிதும் ரசாயனப் பொருட்கள் இன்றி கட்டப்பட்ட கட்டடம்..!!

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரசாயன கலவைகள் ஏதும் சேர்க்காமல் முற்றிலும் இயற்கை பொருட்களால் கட்டப்பட்ட பாரம்பரிய வீடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தட்பவெப்பநிலையை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பாரம்பரிய வீடு. விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் கட்டுமானத்துறையில் நாளுக்கு நாள் புது புது தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் வரும் மாற்றங்கள் ஒரு புறம் இருந்தாலும் அரிதாக மாறிவிட்ட பாரம்பரிய கட்டட கலையை பாதுகாக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபர் ஸ்மிரிதி என்பவரால் கொடைக்கானல் மலையில் உள்ள பள்ளங்கிக்கொம்பை கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ள இயற்கை வீடு செங்கல்களுக்கு பதில் கருங்கல், சிமெண்ட்டுக்கு பதில் சுண்ணாம்பு கலவை, கருப்புப்பட்டி, கற்றாழை, தயிர், முட்டை, நெல்லி என இயற்கையாக கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு இந்த வீடு உருவாகியுள்ளது. கதவு, ஜன்னல்களை தவிர எஞ்சிய வீடு முழுவதும் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன்.

சுவற்றுக்கான வண்ணங்கள் கூட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு இயற்கை முறையில் பூசப்பட்டுள்ளது. வெளியில் நிலவும் தட்பவெப்பநிலை ஏதுவாக இருந்தாலும் இந்த இயற்கை வீட்டுக்குள் இதமான சூழலே நிலவும் என்கிறார், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நாகர்கோவிலை சேர்த்த குமார். வழக்கத்தை விட இரு மடங்கு செலவானாலும் அது வீண்போகாது என்பதும் மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது.

சுமார் 1500 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த இயற்கை வீட்டை இடிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் இதில் பயன் படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்கிறார் இதன் உரிமையாளர். பெருகிவிட்ட அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் இயற்கை பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த வீடு பள்ளங்கி கிராமமக்கள் மட்டும் அல்லாது சுற்றுலாப்பயணிகளாலும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.