ஒசூர்: பசுஞ்சோலையாகும் பயனற்ற நிலங்கள்… ‘மியாவாக்கி’ காடுகள் உருவாக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் ‘ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் ‘இன்டஸ்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு ஒசூரில், 1,700 -க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் உள்ளன; இரண்டு சிப்காட்‘பேஸ்’களில் மட்டுமே, 364 பெருநிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், ஒசூரில் தொழில்மையமாக்கல் காரணமாக, எண்ணற்ற மரங்கள் அழிக்கப்பட்டு, பறவைகள் வாழிடம் இழந்ததுடன், சூழல் மாசடைந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஒசூர் மாநகராட்சியினர் கடந்த, இரண்டு ஆண்டுகளாக தனியார் கம்பெனிகள், சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, பல பகுதிகளில் அடர் நடவு முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், ‘கரிசக்காட்டுப் பூவே’ என்ற சூழல் பாதுகாப்பு அமைப்பினர், மாநகராட்சியுடன் இணைந்து தீவிரமாக குறுங்காடுகள் உருவாக்கி வருவது கவனம் ஈர்த்துள்ளது.

மரக்கன்றுகள் நடவு.

ஒசூரை பசுமைச்சோலையாக மாற்றுவோம்!

இது குறித்து ‘கரிசக்காட்டுப் பூவே’ சூழல் அமைப்பினரை தொடர்பு கொண்டு பேசினோம், ‘‘மாநகராட்சியினர் பயன்பாடின்றி உள்ள பல இடங்களை தேர்வு செய்து அவற்றை சுத்தம் செய்து தருகின்றனர். ஒசூர் பகுதியிலுள்ள இளைஞர்கள், மாணவர்களை திரட்டி நாங்கள் அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து சூழலை பாதுகாத்து வருகிறோம். தற்போது, பத்து இடங்களில் ’மியாவாக்கி’ முறையில் குறுங்காடுகள் உருவாக்கும் பணியை துவங்கியுள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் தலா, 1000 – 1100 மரக்கன்றுகள் வரையில் நடவு செய்து, அவற்றை தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.

குறுங்காடுகள் உருவாக்க மரக்கன்றுகள் நடவு.

ஒவ்வொரு இவடத்திலும் மா, கொய்யா, நாவல், சப்போட்டா உள்ளிட்ட பழ வகை மரக்கன்றுகள், வேம்பு, புங்கன் உள்பட, 60 வகையான மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். நாங்களே நிதி திரட்டி மரக்கன்றுகள் வாங்குவதுடன், தனியார் நிறுவனங்களில் சி.எஸ்.ஆர்., நிதியில் மரக்கன்றுகள் பெற்று குறுங்காடுகள் வளர்த்து வருகிறோம். ஒசூர் பகுதியை பசுமைச்சோலையாக மாற்றுவதே எங்கள் நோக்கம்,’’ என, நம்மிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

37 ஆயிரம் மரக்கன்றுகள்…

ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம், ‘‘ஒசூர் மாநகராட்சியில், இரண்டு ஆண்டில் மட்டுமே பல்வேறு இடங்களில், 37 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து பல குறுங்காடுகள் உருவாக்கியுள்ளோம்.

நடவு செய்து 150 நாட்களில்.

குப்பை மேடுகள், பயனற்ற நிலம், பூங்கா, ஏரி, குடியிருப்பு என அனைத்து பகுதிகளையும், செழிப்பான குறுங்காடுகளாக மாற்றி பறவைகளுக்கு வாழிடம் கொடுத்து, சூழலை மேம்படுத்தி வருகிறோம். ஒசூர் நகர் முழுதிலும், நீங்கள் பல குறுங்காடுகளை பார்க்க முடியும். சூழல் ஆர்வலர்கள், ‘TITAN’ போன்ற பெரு தனியார் நிறுவனங்கள் என அனைவரையும் சூழல் மேம்பாட்டுக்காக பயன்படுத்தி வருகிறோம்,’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., நிதியை, குறுங்காடுகள் வளர்த்தல், நீராதாரங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிக்கு பயன்படுத்த முன்வந்தால், தமிழகம் முழுதும் பசுமைச்சூழல் உருவாகுமென்பதில் சந்தேகமில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.