சிபிஐ கைதுக்கு எதிராக சந்தா கோச்சார் மனு: அவசர வழக்காக விசாரிக்க மும்பை ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சிபிஐ-யின் கைது நடவடிக்கைக்கு எதிர்த்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த வாரத்தில் சிபிஐ கைது செய்தது. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கிய மோசடி குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வந்தது. இது தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிபிஐ-யின் நடவடிக்கையை எதிர்த்து சந்தா கோச்சார், தீபக் கோச்சார் தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி எங்களின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 17ஏ படி, இதுபோன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி எந்த முன் அனுமதியும் பெறப்படவில்லை’ என்று தெரிவித்தனர்.

இதற்கு விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள், “இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை. அதனால், விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும்போது மனுதாரர்கள் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே, வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபல் தூத், தனது நிறுவனத்திற்கு கடன் வழங்க சந்தா கோச்சாருக்கும் அவரது கணவருக்கும் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.