2022 – டாப் 5 ஹீரோக்கள், ஹீரோயின்கள்

2022ம் ஆண்டில் ரஜினிகாந்த் தவிர மற்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளிவந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதை இந்த ஆண்டு ஓரளவிற்கு ஈடு செய்துவிட்டது.

இந்த ஆண்டில் ஹீரோக்களுக்கு இடையில் நேரடியான போட்டி என்பது மிகவும் குறைவாகத்தான் இருந்தது. சரியான இடைவெளியில்தான் திரைப்படங்கள் வந்தன. அதுவே முன்னணி ஹீரோக்களுக்கு இடையிலான போட்டியைக் குறைத்துவிட்டது. இந்த ஆண்டில் சில ஹீரோக்களுக்கு எதிர்பாராத வெற்றியும், சில ஹீரோக்களுக்கு எதிர்பாராத தோல்வியும் கிடைத்துள்ளன. தனித்துவமான வெற்றியை சில குறிப்பிட்ட ஹீரோக்கள், ஹீரோயின்கள்தான் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சில ஹீரோக்கள், ஹீரோயின்கள் யார் யார் எனப் பார்ப்போம்.
டாப் 5 ஹீரோக்கள்

1. கமல்ஹாசன்

1960ம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். 80களில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கடந்த 40 வருடங்களாக இருந்து வருகிறார். அவருடைய இத்தனை வருட சினிமா அனுபவத்தில் அவருக்குக் கிடைக்காத வெற்றி, முதன்மையான வசூல் இந்த ஆண்டில் வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிகப்படியான லாபத்தைக் கொடுத்த படமாக 'விக்ரம்' படம் அமைந்து தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளார் கமல்ஹாசன்.

2. கார்த்தி

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன் நடித்து இந்த ஆண்டில் படங்கள் வந்தாலும் அவர்களை ஒரு விதத்தில் முந்தியிருக்கிறார் கார்த்தி. அவர் நடித்து இந்த ஆண்டில் 'விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதல் வரியில் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைக் காட்டிலும் கார்த்தி நடித்த இந்தப் படங்கள் லாபத்தில் முந்தியுள்ளன. தனது திரையுலகப் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி கார்த்தி பயணிக்க இந்த ஆண்டில் வெளிவந்த படங்கள் உதவி செய்துள்ளன.

3. விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது யார் நம்பர் 1 என்பது குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களில் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் வசூல் ரீதியாக முந்திக் கொண்டு வருகின்றன. அவரது ஒவ்வொரு படமும் லாபத்தைக் கொடுக்கும் போது மட்டுமே அவரால் நம்பர் 1 இடத்தை எட்ட முடியும். ரஜினிகாந்த் போன்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹீரோக்கள் என்று இப்போதுள்ளவர்களில் யாரையும் சொல்ல முடியாது. திடீர் திடீரென விஜய் சில சுமாரான படங்களையும் கொடுத்துவிடுகிறார். அந்த விதத்தில் இந்த ஆண்டில் விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' படம் ஒரு சுமாரான படம்தான். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது உண்மை. இருந்தாலும், இந்தப் படத்தில் இடம் பிடித்த 'அரபிக்குத்து' பாடல் விஜய்யின் பிரபலத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது. அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'வாரிசு' படத்தின் வெற்றிதான் யார் நம்பர் 1 என்பதை தீர்மானிக்கும்.

4. அஜித்

2019ல் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வியாபார ரீதியாக அஜித்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடித்து எந்தப் படமும் வெளிவரவில்லை. கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த 'நேர்கொண்ட பார்வை' படமும் பெரிய வசூலைக் குவிக்கவில்லை. அதனால், இந்த ஆண்டில் வெளிவந்த 'வலிமை' படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக அந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்த்ததையே அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

5. பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக நடிகரால் இந்த அளவிற்கு வசூல் ரீதியான ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியுமா என்பது ஆச்சரியம்தான். முன்னணி ஹீரோக்களின் சில படங்களே இந்த வருடத்தில் தடுமாறிக் கொண்டிருந்த போது தனது 'லவ் டுடே' படம் மூலமாக கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் பிரதீப் ரங்கநாதன். விஜய், அஜித் படங்கள் தந்த லாபத்தை விட இவரது 'லவ் டுடே' படம் தந்த லாபம் அதிகம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். தனக்குக் கிடைத்த இந்த வரவேற்பு, வசூல் ஆகியவற்றை பிரதீப் தக்க வைத்துக் கொள்வதில் இருக்கிறது அவரது சாமார்த்தியம்.

டாப் 5 ஹீரோயின்கள்

1. த்ரிஷா

2022ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. எத்தனையோ முன்னணி நடிகர்கள், வெற்றிப் படங்கள் என கடந்த 20 வருடங்களாக திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவது சாதாரண விஷயமில்லை. 2018ம் ஆண்டு வெளிவந்த '96' படம் அவருக்கு மீண்டும் ஒரு இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தது. இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் மீண்டும் அவரைப் பற்றிப் பேச வைத்தது. 'குந்தவை' கதாபாத்திரத்தில் த்ரிஷாவா என்று கொஞ்சம் அதிர்ச்சியானவர்கள் படத்தைப் பார்த்த பின் ஆச்சரியப்பட்டார்கள். படத்தில் நடித்த முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை விடவும் த்ரிஷாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

2. ஐஸ்வர்ய லெட்சுமி

2019ல் வெளிவந்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் 'ஜகமே தந்திரம்' படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் ஐஸ்வர்ய லெட்சுமி நடித்து 'கார்கி, பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி' உள்ளிட்ட 5 படங்கள் வெளிவந்தன. இதில் மூன்று படங்கள் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் இடம் பெற்றவை. குறிப்பாக 'கார்கி' படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அதில் சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர். 'கார்கி' யில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார் ஐஸ்வர்யா. 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வசீகரித்தார். 'கட்டா குஸ்தி' படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து வியக்க வைத்தார்.

3. சாய் பல்லவி

தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத சாமர்த்தியசாலி சாய் பல்லவி. தெலுங்கில் கூட அவரைத் தேடி நல்ல கதாபாத்திரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், தனது சொந்த மாநிலத்தில் அவரைத் தேடி நல்ல கதாபாத்திரங்கள் போகவில்லை. இருப்பினும் இந்த ஆண்டில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'கார்கி' திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு படமாக இருந்தது. எளிமையான அழகுடன் இயல்பாக நடித்து ரசிகர்களைக் கவரும் நடிகைகளில் இப்போதைக்கு சாய் பல்லவிக்குத்தான் முதலிடம். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு விருதுகளுக்குரிய மற்றுமொரு சிறந்த நடிப்பாக அமைந்தது.

4. நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்து தலை காட்டினாலும் வரும் போதொல்லாம் தன்னைப் பற்றி பேச வைப்பவர் நித்யா மேனன். இப்படி ஒரு தோழி நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று இன்றைய இளைஞர்களை ஏங்க வைத்தவர். 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனன் ஏற்று நடித்த ஷோபனா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் நிரந்தரமாகப் பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரம் என்பதை மறுக்க முடியாது. எந்த ஒரு காட்சியிலும் நித்யா நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு நம் கண்முன் ஷோபனாவை மட்டுமே காட்டினார். எப்போதோ ஒரு முறை தமிழ் சினிமா பக்கம் வராமல் அடிக்கடி வாருங்கள் நித்யா என ரசிகர்களை சொல்ல வைத்துவிட்டார்.

5. இவானா

முன்னணி நடிகைகளே இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்த தனி கதாநாயகி வாய்ப்பு தந்த 'லவ் டுடே' குழுவினருக்கு தன் திறமையான நடிப்பின் மூலம் நன்றியைப் பதிவு செய்துள்ளார் இவானா. பெரிய நிறுவனம், கதாநாயகனாக முதல் படம் என்று இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வேறு முன்னணி கதாநாயகிகளைக் கூட நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், இவானாவைத் தேடிப் பிடித்து மீண்டும் கொண்டு வந்து நடிக்க வைத்தார். இயக்குனர் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார் இவானா. அவரது கதாபாத்திரமும், நடிப்பும் இன்றைய இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

இந்த 2022ம் ஆண்டு எதிர்பாராத வெற்றிகளையும், தோல்விகளையும் கொடுத்துள்ள ஒரு ஆண்டாகத்தான் அமைந்துள்ளது. யார் பிரபலமாவார்கள், எந்தப் பிரபலம் பின் வாங்குவார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு சில பல திருப்பங்கள் நிறைந்தபடிதான் கடந்து கொண்டிருக்கிறது. பிரபலமும், அழகும் சினிமாவில் வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை, திறமையும், நடிப்பும் தான் பெற்றுத் தருகிறது. சரியான அடியை எடுத்து வைத்தால் பின் வரிசையில் இருப்பவர்கள் கூட முன் வரிசைக்குச் செல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த ஆண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.