பாஜகவிற்கு ’நோ’ என்ட்ரி… 30 வருஷமா டஃப் கொடுக்கும் கோவை காந்தி காலனி- என்ன காரணம்?

கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி காலனியில் வைக்கப்பட்ட பாஜக கொடி கம்பத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் ஊரில் பாஜகவை அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்து கம்பத்தையே அகற்றும்படி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற கட்சிகளின் கொடிக்கம்பம் இருப்பது போல பாஜக கொடிக் கம்பமும் அங்கே இருக்க வேண்டும் என்கிறது மாவட்ட பாஜக. ஆனால் கிராம மக்கள் எதிராக நிற்கின்றனர். அசோகபுரம் காந்தி காலனியில் பாஜக மீது ஏன் இப்படியொரு வெறுப்பு?

அசோகபுரம் ஊராட்சி

கொடிக் கம்பத்தை எதற்காக அகற்றும்படி செய்தனர்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடலாம் வாருங்கள். கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து இடிகரை செல்லும் வழியில் அமைந்துள்ளது அசோகபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள் இருக்கும் காந்தி காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையான மக்கள் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

5 கட்சிகளின் கொடி கம்பங்கள்

இங்கு கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவை உள்ளே அனுமதிப்பது இல்லை. அந்த கட்சியிலும் யாரும் சேர்வதில்லை. தற்போது திமுக, அதிமுக உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கின்றன. பாஜகவிற்கு கொடிக் கம்பம் இல்லை. இதுகுறித்து காந்தி காலனி மக்கள் சிலர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு சில இளைஞர்கள் பாஜகவில் சேர்ந்தனர்.

பாஜகவினரால் வந்த பிரச்சினை

அப்போது பாஜகவினரால் பல்வேறு பிரச்சினைகள் வெடித்தன. மக்களின் நிம்மதி பறிபோனது. அந்த கட்சியை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள் எங்களுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அவர்களை விரட்டி அடித்தால் என்ன? என்று தோன்றியது. அதன்பிறகே காந்தி காலனியில் அமைதி திரும்பியது. அப்போது முதல் எங்கள் ஊருக்குள் பாஜகவை அனுமதிக்க மாட்டோம் என்றும், அக்கட்சியில் யாரும் சேரக்கூடாது என்றும் முடிவு செய்தோம்.

மீண்டும் வந்த எழுச்சி

இதுதொடர்பாக கிராமத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றி இருக்கிறோம். மற்ற கட்சிகளை சேர்ந்த நபர்களை சகோதர மனப்பான்மை உடன் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் பாஜகவை மட்டும் அப்படி பார்க்க இயலாது எனத் தெரிவித்தனர். இந்த சூழலில் 2022ஆம் ஆண்டு காந்தி காலனியில் மீண்டும் பாஜகவின் எழுச்சி ஏற்படத் தொடங்கியது.

எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

சின்ராஜ் என்ற ஒரே ஒரு இளைஞர் பாஜகவில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். அவர் தான் கொடிக் கம்பத்தை நடும் வேலைகளை செய்துள்ளார். அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் வந்து கொடிக் கம்பத்தை நட்டு வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை

இதுபற்றி தகவலறிந்து போலீசார் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சுமார் 50 கிராம மக்கள் கையெழுத்திட்டு மனு அளித்திருக்கின்றனர். பின்னர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், போலீசார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடி கம்பம் அகற்றப்பட்டது.

தமிழகத்தில் 4 எம்.எல்.ஏக்கள் உடன் தாமரையை மலரச் செய்து பாஜக புத்துயிர் பெற்று வருவதாக ஒருபுறம் பேசிக் கொண்டாலும், அந்த கட்சியை ஊருக்குள் கூட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கின்றனர் கோவை காந்தி காலனி மக்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.