பொதுமக்களுக்கு தரமான கரும்புகளை வழங்கவேண்டும் – தமிழக அரசு உத்தரவு.!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணம், முழு கரும்பு உள்ளிட்டவை கொடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதில் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கரும்பு ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உள்பட அதிகபட்சமாக 33 ரூபாய் செலவழிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். 

அவ்வாறு செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் ஆறு அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்புகளை கொள்முதல் செய்யப்படக்கூடாது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு சராசரி தடிமனைவிட சற்று கூடுதலாக இருக்க வேண்டும். 

அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரும்பு கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறையில் குழுக்கள் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரும்புக் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக்கூடாது. 

கரும்புகளை கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் என்று அனைத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் இருந்து ஒட்டுமொத்த கொள்முதலையும் மேற்கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக அந்த கிராமம் முழுவதும் பரவலாக உள்ள கரும்பின் தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

எந்தக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக இந்த வருடம் விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். 

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். எந்தெந்த நாட்களில் எத்தனை குடும்ப அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்ப கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். 

எந்தக் காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு முன்கூட்டியே கொள்முதல் செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். 

அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தான் பொறுப்பு .அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனத்துடன் அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் 

மேலும், பச்சரிசி மற்றும் முழு கரும்பு உள்ளிட்டவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.