பொங்கல் பரிசுத் தொகுப்பை பண்டிகைக்கு முன்பு வழங்க அறிவுறுத்தல்: நியாயவிலை கடைகளுக்கு ஜன.13 பணி நாளாக அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2.19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுகரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.2,430கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் வே.ராஜாராமன் வெளியிட்ட சுற்றறிக்கை:

பொங்கல் பரிசு, ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களையே சாரும். சென்னையில், உணவுப்பொருள் வழங்கல் வடக்கு, தெற்கு துணை ஆணையருக்கு முழு பொறுப்பு உண்டு.

பொங்கல் பரிசு விநியோகத்தை முதல்வர் ஜன.9-ம் தேதி தொடங்கி வைத்த பிறகு, அனைத்து நியாயவிலை கடைகளிலும் பணி தொடங்கப்பட வேண்டும், பரிசுத்தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கவேண்டும். இதற்காக நியாயவிலை கடைகளுக்கு ஜன. 13-ம் தேதி பணி நாளாகும். அதற்கு பதில் ஜன.27-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்கவேண்டும். நாள், நேரம் குறிப்பிட்டுடோக்கன் வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறை உதவியை பெற வேண்டும்.

விற்பனை முனைய இயந்திரம்மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பைவழங்க வேண்டும். அங்கீகாரச் சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்களை விநியோகிக்கலாம்.மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.