குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1,996 வீடுகள் – கலைஞர்களுக்கு 108 வீடுகள்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

சீன அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் கடனுதவியை வழங்கும், அதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,888 வீடுகளும், பழம் பெரும் கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பேலியகொட, மஹரகம, மொரட்டுவ, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொட்டாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக சீன அரசு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் இணைந்து மக்கள் தொகை ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தின் பிரதி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பரில் சீன அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

முனீரா அபூபக்கர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.