விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது: 14 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூயார்க்கில் இருந்து  கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் குடிபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது.  

அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை நிறுவனத்தின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டு, அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கி விட்டதாக அவர் பணியாற்றி வந்த நிறுவனம்  தெரிவித்திருந்தது.

மிஸ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.  சங்கர் மிஸ்ரா செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், கடைசியாக அவர் பேசிய இடம் பெங்களூரு என்று தெரிய வந்தது. பெங்களூரு சென்ற டெல்லி போலீசார்,  சங்கர் மிஸ்ரா டாக்சியில் மைசூரு போகும்போது வழிமறித்து கைது செய்து டெல்லி கொண்டு வந்தனர். அங்கு  சங்கர் மிஸ்ராவை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

* 3 ஊழியர்களிடம் விசாரணை விமானி உள்பட 5 பேர் டிஸ்மிஸ்
பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பல் வில்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், விமானி உட்பட 5 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி கேம்ப்பல் வில்சன் கூறும்போது, “இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.

எங்கள் பணியாளர்கள் இதை இன்னும் சரியாக கையாண்டு இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்ய தவறியதால் விமானி உள்ளிட்ட 5 பேரை பணி நீக்கம் செய்துள்ளோம். விமானங்களில் மது விநியோகம் செய்வது பற்றி மறுபரிசீலனை செய்து வருகிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.