நீரில் மலம் கலந்த விவகாரம் – வேங்கை வயலில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொடையூர் வட்டம், வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் மனித கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின்

1.பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், உறுப்பினர்

2.பேராசிரியர் முனைவர் ஆர்.ராஜேந்திரன், உறுப்பினர்

3.கோ. கருணாநிதி, உறுப்பினர்

4.மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், உறுப்பினர்

ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய துணைக் குழுவானது மேற்கண்ட கிராமத்தில் எதிர்வரும் 13.01.2023 அன்று ஆய்வு மேற்கொள்வதோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடவும் உத்தேசித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரை உடனே நேரில் ஆய்வு செய்து குடிநீரில் மலம் கலந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கே திரண்டனர். அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உட்பட அதிகாரிகள் விசாரணை செய்து 11 பேர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முதலில் கிராமத்திற்குச் சென்று நேரில் விசாரணை செய்த பிறகு முதற்கட்டமாக 7 பேருக்கு சம்மன் அனுப்பி வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தனர். ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இன்னும் சிலருக்கு சம்மன் தயாராக உள்ளது. மேலும் சம்பவம் நடந்த நாளில் ஊரிலிருந்து தற்போது வெளியூர் சென்றுள்ள நபர்களுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்ப விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.