பெங்களூருவில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற 7 பேர் கைது

பெங்களூரு:

கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்

பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனகபுரா ரோட்டில் ராகுல் பாலகோபால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் ராகுல் எழுந்து காபி போடுவதற்காக சமையல் அறைக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனால் வீட்டுக்குள் திருடர்கள் யாரும் வந்திருக்கலாம் என்று ராகுல் நினைத்தார்.

உடனடியாக அவர், வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களை பரிசீலித்தார். அப்போது ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகி இருந்ததால், ராகுல் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக தனது தந்தைக்கும், பக்கத்தில் உள்ள காவலாளிக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார்கள்.

7 பேர் கைது

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த 10 நிமிடத்திலேயே சம்பவ இடத்திற்கு தலகட்டபுரா போலீசார் விரைந்து வந்தனர். உடனே ராகுல் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் பதுங்கி இருந்த 7 பேர் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயன்றனர். அந்த நபர்களை, போலீசார் சினிமா பட பாணியில் விரட்டி சென்றார்கள். பின்னர் ராகுல் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிய 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்துகைது செய்தார்கள்.

அவர்கள் பெயர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த சேக் கலீம் (வயது 22), பீகாரை சேர்ந்த முகமது நிராஜ், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது இம்ரான், சையத் பைசல், ராஜஸ்தானை சேர்ந்த ராம்பிலாஸ், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுனில், ஒடிசாவை சேர்ந்த ரஜத் என்று தெரிந்தது.

கொள்ளையடிக்க திட்டம்

இவர்கள் 7 பேரும் ராகுல் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. அதாவது ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ராகுல், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததுடன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததால், 7 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தனர்.

கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல கொள்ளை வழக்குகளில் 7 பேரும் ஈடுபட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 7 பேர் மீதும் தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.