பொள்ளாச்சியில் 8 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்: ஆகாயத்தில் பறந்த சுற்றுலா பயணிகள் வியப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 8 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நேற்று துவங்கியது. ஆகாயத்தில் பறந்த சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார், வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளதால், அங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், முதல் முறையாக வெப்ப காற்றழுத்த பலூன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு மைதானம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல் சர்வதேச ராட்சத வெப்ப காற்றழுத்த பலூன் திருவிழா துவங்கப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று அதிகாலையில், பொதுமக்கள் பார்வைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், வியட்நாம், தாய்லாந்து, பிரேசில், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வெப்ப காற்றழுத்ததுடன் கூடிய 10 ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, கலெக்டர் சமீரன் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும், வெவ்வேறு பலூனில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு சுமார் 100 அடிக்கு மேல் பறந்து சென்றனர். அதன்பின், அந்த பலூன் அம்பராம்பாளையம் அருகே மற்றும் பொன்னாயூர் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே தரையிறங்கியது. வானில் வட்டமிட்டபடி மிதந்து சென்ற, வெப்ப காற்றழுத்த ராட்சத பலூனை, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வியந்தனர். இதில், தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருந்த ராட்சத பலூனை பார்த்த பலரும் கைத்தட்டி உற்சாகமடைந்தனர். இந்த காற்றழுத்த பலூன் திருவிழா 15ம் தேதி வரை நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.