கதவை இழுத்து சாத்தும் ஓபிஎஸ்; மத்திய அரசு அதிர்ச்சி!

அதிமுகவின் தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும்
ஓ.பன்னீர்செல்வம்
ஆகியோரிடையே கடுமையான போட்டியும் மோதல் போக்கும் நிலவி வருகிறது.

இவர்கள் 2 பேருமே தங்களது ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு கட்சியை கைப்பற்ற பல்வேறு வழிகளில் திட்டங்களை தீட்டியபடி காய்களை நகர்த்திக்கொண்டு வருகின்றனர்.

இதில் எடப்பாடி பழனிச்சாமி ஒருப்படி மேலே போய் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என முடிசூட்டிக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த
ஓபிஎஸ்
மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியைவிட்டு நீக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் விரைவாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டது.

இதை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது.

இதேப் போன்று பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஜனவரி 16ம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கொள்கைக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதிமுகவில் கோஷ்டி மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தலைமை பதவிக்காக காய் நகர்த்தி வருகிற நிலையில் எடப்பாடியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் மத்திய அரசு கடிதம் அனுப்பியது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தன்னை பழிவாங்கிய மத்திய அரசுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமா என்பது தெரியவில்லை. எங்களது தரப்பு கருத்துக்களை விரைவில் தெரிவிக்க இருக்கிறோம்.

இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்து ராஜ் வரை கருத்து கேட்க வேண்டும். அவை அனைத்தையும் கேட்டு நிறைவேற்றுவதற்குள் தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலே வந்துவிடும்’ என, புகழேந்தி கூறியுள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசின், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பார் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.