சிறுமலை வன கிராமங்களில் விவசாயிகள் கொண்டாடிய ‘குதிரை பொங்கல்’

திண்டுக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம். இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது இந்த மலை கிராமங்களில் உள்ள வனபகுதியில் சாலை வசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றை பயிர் செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் விளையக் கூடிய காய்கறி மற்றும் பழங்களை ஊருக்கு எடுத்துட்டு வர வேண்டும் என்றால் குதிரையின் முதுகில் மூட்டையாக கட்டி தான் எடுத்து வேண்டும். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு குதிரையாவது வைத்திருப்பார்கள். 

இதனையடுத்து கிராமங்களிலிருந்து சரக்கு வேன் மற்றும் பேருந்து மூலமாக திண்டுக்கல்லிற்கு கொண்டு வந்து காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யப்படுகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கல் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று 16.01.23 மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுமலையில் மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். 

தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க கூடிய குதிரைகளை தெய்வமாக கருதி அதனை குளிப்பாட்டி அதற்கு கலர் பொடிகளை கொண்டு உடல் முழுவதும் பொட்டு வைத்து அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்து குதிரைக்கு ஊட்டி விடுவார்கள். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 

இன்றைய தினம் குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதனை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்க.ள் எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள். தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரையை தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.