`இவற்றை கியூபாவுக்கு எடுத்துச் செல்வேன்’- அலெய்டா குவேரா கூட்டத்திலும் ஒலித்த `தமிழ்நாடு’ | ஹைலைட்ஸ்

`புரட்சி’ என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் பலருக்கும் நினைவுக்கு வருவது தொப்பி அணிந்த ஒருவரின் முகம். அவர் பெயர் `சே குவேரா.’ அவரின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா நேற்று (18.01.2023) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகமான பாலன் இல்லத்துக்கு வருகை புரிந்தார். அவரைக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும், குழந்தைகளும் வாசலில் நின்று மலர்கள் கொடுத்து வரவேற்றார்கள். “We Salute – Red Salute”, “Red Salute to comrade”, “Long live long live- India, Cuba friendship long live”, ஆகிய கோஷங்களை முழங்கியும் அவரை வரவேற்றனர்.

சிபிஐ நிகழ்ச்சி

அலெய்டா குவேரா மேடையில் அமர்ந்ததும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அனைவரையும் வரவேற்றார். மேடையில் அலெய்டா குவேரா பேசும்போது, “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றிகள், நான் கியூபா பெண் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். எனினும், நான் ஒரு மாபெரும் மனிதனின் மகளாக இருப்பதைப் பெருமையாகக்கொள்கிறேன். என் தந்தைக்கு நான் பிறந்ததை ஒரு மரபுவழி விபத்தாகத்தான் நான் கருதுகிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறியவர், “நாம் மனிதனாக இருக்கும்போதுதான் நமக்கு மதிப்பு கிடைக்கிறது. அங்கோலா நாட்டு மக்களை என் கரங்களால் நான் காப்பாற்றியிருக்கிறேன். ஒரு மனிதனுக்கு மகனாகவோ, மகளாகவோ இருப்பதைக்காட்டிலும், இதைப்போல் நல்ல செயல்கள் செய்வதே பெருமை. இன்று, என் தந்தைக்கு நீங்கள் காட்டிய அன்பைக் காண்கிறேன். சே குவேராவின் மகளாக நான் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். கியூப கம்யூனிஸ்ட் செயலாளராக நன்றி கூறுகிறேன். இதுபோல் தொடர்ந்து மக்கள் சக்தியுடன் இருந்து போராடிக்கொண்டேயிருக்க வேண்டும். நாம் வெற்றிபெறும் வரை போராடிக்கொண்டேயிருக்க வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து அவருக்கு நினைவுப்பரிசுகள், பொன்னாடைகள் என வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெஃபானி குவேராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு இணைந்து வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தினர். அங்கு அனைத்து இளைஞர்களும் சே குவேராவின் முகம் பதித்த டி-சர்ட்டும், பெரியார் முகம் பதித்த டி-சர்ட்டும் அணிந்திருந்தனர்.

அலெய்டா குவேரா

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், காங்கிரஸ் சார்பாக போபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பறை இசை இசைக்கப்பட்டது. 87 வயதான உமையாள்புரம் சிவராமன், சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து மிருதங்கம் வாசித்து வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க, அலெய்டா சே குவேரா அதைக் கண்டு களித்தார்.

கனிமொழி – அலெய்டா குவேரா

இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் பிரமுகர்களும், வாழ்த்துரைகளும், வரவேற்புரைகளும் வழங்கினர். திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, `தமிழ்நாடு’ என்ற வார்த்தையைத் தன் உரை முழுவதும் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். “உலகளாவிய மனிதப் பார்வை, சே குவேராவுக்கும் பெரியாருக்கும் இருந்தது. எனக்கும் உங்களுக்கும் (கம்யூனிஸ்ட்) உள்ள உறவு புதுப்பிக்கும் உறவல்ல. எப்பொழுதும் தொடர்கிற உறவு. நீங்கள் (அலெய்டா குவேரா) கியூபாவின் மகள் மட்டுமல்ல… இந்த நாட்டின் மகள், நீங்கள் தமிழ்நாட்டின் மகள்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, “எத்தனையோ ஆண்டுகளாகப் புத்தகங்களில், சுவரொட்டிகளில் `புரட்சி’ என்ற சொல்லை நினைக்கும்போதெல்லாம் கண்முன்னால் வந்து நிற்கும் அந்த முகத்தின் சாயலை அலெய்டா குவேரா வாயிலாக இந்த மேடையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எங்கள் தலைவர் கலைஞரிடம், அவர் உயிரோடு இருக்கும்போது, `உலகத் தலைவர்களில் நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர்கள் யார்?’ என்று ஒருமுறை கேட்டபோது, முதலில் சொன்ன பெயர், `ஃபிடல் காஸ்ட்ரோ.’ அடுத்து சொன்ன பெயர், `சே குவேரா.’ அப்படிப்பட்ட சே குவேராவின் மகளோடு இந்த மேடையைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. புரட்சிக்கான அடித்தளம், நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கான சின்னமாக இருப்பது கியூபாவும் சே குவேராவும்தான்” என நெகிழ்ந்தார்.

அலெய்டா குவேரா

தொடர்ந்து, “இன்றைய இளைஞர்கள்கூட தங்களுடைய சட்டைகளில் அந்த முகத்தை வைத்துக்கொண்டுதான் இந்த உலகத்தைத் தங்களால் மாற்றிவிட முடியும் என்று நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள். கியூபாவுக்காக நிச்சயம் நாம் தொடர்ந்து நிற்போம்; அந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம். இங்கு உருவான புரட்சிக் கனல்தான், `நான் சொல்லாத ஒன்றைச் சொல்லிவிட்டீர்கள்’ என்று அவர்களைச் சொல்லவைத்திருக்கிறது” எனத் தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அளித்திருக்கும் விளக்கம் குறித்து கனிமொழி பேசினார்.

தொடர்ந்து, “சாதாரணமாகச் சீண்டிப் பார்த்தால், தமிழர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். அவர்களை மேலும் சுரண்டிப் பார்த்தால்தான் உள்ளே ஒரு தீக்கங்கு அணையாமல் இருப்பதைப் பார்க்க முடியும். அப்படியிருக்கையில், யாராக இருந்தாலும், `நான் அப்படிச் சொல்லவே இல்லையே…’ என்று சொல்லித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு நிலையை நாம் உருவாக்கிக் காட்டயிருக்கிறோம்” என்றார்.

அலெய்டா குவேரா

தொடர்ந்து நிகழ்வில் பேசிய திருமாவளவன், “புரட்சிக்கான நம்பிக்கையாக, அவர்களுக்கான (கியூபா மக்கள்) நம்பிக்கையாக நாம் அத்தனை பேரும் இருப்போம். சே குவேரா இருந்திருந்தால் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்த சம்பவத்தைக் கண்டித்திருப்பார்” என்றார்.

அலெய்டா குவேரா

பின்னர் பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “தன்னுடைய தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாத மகள் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். காரல் மார்க்ஸ், லெனின், ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற தந்தையின் அன்பும் அரவணைப்பும் எங்களுக்கும் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் அறிவால், உணர்வால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அரங்கம் முழுவதும் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி சிந்தனைகள் எழுச்சி பெற்றுவரும் இந்த நிலையில்கூட தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளின் ஆட்சி அமைந்துவருகிறது. நீண்ட நெடுங்காலமாக ஏகாதிபத்தியத்தால் பல இன்னல்களுக்கு ஆளாகும் கியூப மக்களுக்காக இங்கு கூடியிருக்கும் தோழர்கள் என்றும் துணை நிற்போம்” என்று உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய அலெய்டா குவேரா, “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு வந்தேன். இங்கு எனக்கு அளிக்கப்பட்ட அன்பை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றேன். அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான அன்பை க்கண்டேன். நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். `அடித்தட்டு மக்களிடம் இணைந்திருக்க வேண்டும்’ என்று என் அம்மா சிறு வயதிலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார். சே குவேராவின் மகள் என்பதாலேயே அதிக அன்பைப் பெறுகிறேன். சே குவேராவின் மகளாக இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். அதேபோல என் தாய்க்கு மகளாகப் பிறந்ததை நினைத்தும் பெருமைகொள்கிறேன்.

அலெய்டா குவேரா

பூமிப் பந்தின் மேல் காலூன்றி, நிலத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்று என் தாய் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இன்று நான் உருவாவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் அவர்தான். என் பேத்தி மிகவும் சிறு வயதாக இருந்தபோது இந்தியாவுக்கு வந்தோம். அவள் சிறு வயதாக இருந்தபோது ஹவானாவில் ஒரே ஒரு குட்டி யானை மட்டும்தான் இருந்தது. அதுவும் இறந்துவிட்டது. அப்போது இந்தியாவில் நிறைய யானைகள் இருப்பதை அறிந்துகொண்டு, அதன் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். தற்போது கேரளாவில் மாநிலத்திலேயே மிகப்பெரிய யானையைப் பார்த்தோம். அதன்மீது ஏறி சவாரி செய்த அந்த 15 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.

அலெய்டா குவேரா

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக நானும் இருக்கிறேன், எனக்குப் போர்த்திய சால்வைகள் அனைத்தையும் கியூபாவுக்கு எடுத்துச் சென்று, அவர்களிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். இதன் மூலம் இந்த நாட்டின் மக்கள் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களும் அறிந்துகொள்வார்கள். காலம் கடந்திருக்கலாம். ஆனால், நம் லட்சியமும் மன உறுதியும் அப்படியேதான் இருக்கின்றன. நாம் அனைவரும் ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதை நோக்கி நகர வேண்டும். என்றவர், “உங்கள் மாநிலத்தின் பெயர் என்ன?” எனக் கேட்க, அனைவரும், “தமிழ்நாடு’’ என்றனர்.

அலெய்டா குவேரா

“இதோ நீங்கள் கூறிய அந்தப் பெயர்தான் இன்று உங்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு. அதை நோக்கித்தான் உங்கள் பயணம் இருக்க வேண்டும். கியூபாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளில் தாக்குதல் நடத்துகிறது. இது கியூபாவில் வாழும் மக்களை மிகவும் பாதிக்கிறது. கியூபாவின் பொருளாதாரம் சிக்கலில்தான் இருக்கிறது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாகப் பெரும் இழப்புகளை கியூபா சந்தித்திருக்கிறது. கியூபாவுக்கு வரும் கப்பல்களை வரவிடாமல் அமெரிக்கா தடுக்கிறது. கியூப மக்களிடமிருந்து அமெரிக்காவால் எதை வேண்டுமானாலும் பறித்துவிட முடியும். ஆனால் எங்களின் மன உறுதியை ஒருபோதும் பறிக்க முடியாது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.