"சினிமாவில் உள்ள சிலர் மத்திய அரசுக்கு எதிராகப் பேசக் காரணம் திராவிடக் கட்சிகள்தான்!"- கனல் கண்ணன்

நாகர்கோவில் வந்திருந்த சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் பின்னர் சினிமா இயக்குநர் பி.சி.அன்பழகனுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். பின்னர் நெல்லை புறப்படத் தயாரான கனல் கண்ணனைச் சந்தித்துப் பேசினேன். சினிமா, அரசியல் என இரண்டையும் கலந்து நம்மிடம் பேசினார் கனல் கண்ணன்.

தமிழ் சினிமாவைக் கவனிச்சிட்டு வர்றீங்களா? அடுத்தடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க?

“நான் இப்ப ‘சந்திரமுகி 2’ பண்ணிட்டு இருக்கிறேன். மலையாளம், கன்னடத்தில் படங்கள் பண்றேன். தமிழ் சினிமாவில் ஹீரோவை மையமாக வைத்துக் கதை போய்விட்டது. தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சின்ன, நல்ல படங்களைத் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறது இல்லை. ‘லவ் டுடே’ படத்தை ஹிட்டாக்கியவர்கள் அதே கான்செப்டில் வந்த நல்ல சினிமாவான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைப் பார்க்கவில்லை. நடிகர்கள் மோகம் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் நல்ல படத்தை ரசிக்கமாட்டேங்கிறாங்க.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ-வுடன் சந்திப்பு

மலையாளத்தில் ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படம் செம்ம ஹிட். அது சிம்பிள் படம்தான், ஆனா நல்ல வசூலைக் கொடுத்தது. இங்க போஸ்டர்ல கவர்ச்சிகரமான ஆர்ட்டிஸ்ட் இருந்தால்தான் படம் ஓடும். ஒரு பிரமாண்டமான படம் பார்க்கணும் அப்பிடீங்கிற மைன்ட்செட் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கு. அந்த நிலைமை சீக்கிரமே மாறிடும்னு நினைக்கிறேன். அதுபோல, பெரிய கதாநாயகர்களின் ரசிகர்களாக இருந்துகொண்டு மாறிமாறி மோதிக்கொள்ளும் அப்பாவி மக்கள் பாவம் என்றுதான் நான் சொல்வேன்.”

தற்போதைய அரசியல் களம் எப்படியிருக்கிறது? சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது இப்பவும் எடுபடுமா?

“காயத்ரி ரகுராமை அரசியலில் சேர்க்க முடியாது. குஷ்பு ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவங்க. இப்ப குடும்பமா செட்டில் ஆனபிறகு பொது வாழ்க்கைக்கு வந்திருக்காங்க. காயத்ரி ரகுராமையும் குஷ்புவையும் கம்பேர் பண்ணமுடியாது. சினிமா பிரபலங்களின் அரசியல் ஆளுமை எம்.ஜி.ஆர் காலத்தோட முடிஞ்சுபோச்சு. அதன்பிறகு எந்தத் தலைமுறையும் வர வாய்ப்பே இல்லை. சிலர் நிறைய ரசிகர்கள், ஃபாலோயர்ஸ் இருப்பதாகச் சொல்லலாம். ஆனால், பழைய நிலை இனி வராது.

ஆந்திராவில் ஓகோவென இருந்த சினிமா பிரபலங்கள் அரசியல்கட்சி ஆரம்பிச்சு பார்த்தாங்க, முடியல. இந்தியாவில் மக்களிடம் அரசியல் வேறு சினிமா வேறு என்ற எண்ணம் வந்துவிட்டது.”

கனல்கண்ணன், பி.சி.அன்பழகன்

சமீபத்திய சமூகப் பிரச்னைகளைக் கவனிக்கிறீர்களா?

“மேல் சாதி, கீழ் சாதி என்ற விஷயமே சினிமாவில் கிடையாது. நாங்கள் பட்டியலின மக்களையும், மற்றவர்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் சிலபேர் எதையாவது பேசித் தப்பான வழிகாட்டுதல் செய்கிறார்கள்.

சினிமாவில் உள்ள சிலர் மத்திய அரசுக்கு எதிராகவும் பா.ஜ.க-வுக்கும் எதிராகப் பேசுவதற்கு இங்குள்ள திராவிட கட்சிகள்தான் காரணம். 40 வருடத் திராவிடத்தை பி.ஜே.பி வந்து உடைப்பதைத் தாங்காத கொந்தளிப்புதான் இதற்குக் காரணம்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.