பிரிந்துசென்ற மனைவி மீது கோபம் -போலி இன்ஸ்டா கணக்கு துவங்கி முன்னாள் கணவர் செய்த வேலை

புதுச்சேரியில் திருமணமாகிப் பிரிந்த மனைவியின் பெயரில், போலி இன்ஸ்டாகிராம் கணக்குத் தொடங்கி அப்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை அந்தப் போலி கணக்கில் பதிவேற்றம் செய்த அவரின் முன்னாள் கணவரை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் உருவாக்கி, அதில் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, மேலும் தான் குறுஞ்செய்தி அனுப்புவது போல், தன் நண்பர்களுக்கு ஒருவர் செய்தி அனுப்பி வருவதாக புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த ஆய்வாளர் கீர்த்தி, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி அந்த பெண்ணினுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது அவருடைய முன்னாள் கணவர் புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த மணிகண்டன் (23) என தெரியவந்தது.
image
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தனக்கும் தனது மனைவிக்கும் 2 வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி தற்போது பிரிந்து வாழ்வதாகவும், இதில் அவர் மீது உள்ள கோபத்தால் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் போலி கணக்கு தொடங்கி பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து போலீசார் அவரிடமிருந்து போலி கணக்கு திறக்க பயன்படுத்தப்பட்ட செல்ஃபோனை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எடுக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், புதுச்சேரியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உள்ள நவீன தொழில்நுட்பம் மூலம் இது போன்ற அனைத்து விதமான குற்றங்கள் செய்தவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்பதால் இணைய வழியாக பாதிக்கப்படும் பெண்கள் தயக்கமின்றி புகார் கொடுக்க முன்வர வேண்டும் என இணையவழி குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.