ரூ.612 கோடியில் அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை நெருங்குகிறது: விரைவில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு

மதுரை: மதுரை நத்தம் சாலையில் அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் இடையே 7.4 கி.மீ. நீள பறக்கும் பால பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து அந்த சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலையில், ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில், மதுரை அவுட்போஸ்ட் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.4 கி.மீ தூரத்திற்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பணி கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கியது.

மீதியுள்ள ரூ.416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 ஒற்றை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் பாலத்தின் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. 2021க்கு பின் கொரோனா தொற்று தளர்வுக்குபின் இரவு, பகலாக முழுவீச்சில் பணிகள் நடைபெற்றன. தூண்களில் சிறகு மற்றும் இணைக்கும் பணிகள் அனைத்தும் நவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி நடைபெற்றது.

இந்த ரெடிமேடு கான்கிரீட் தளம் ஊமச்சிகுளம் அருகே தனியாக வேறு இடத்தில் தயார் செய்யப்பட்டு, அதனை கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வந்து, ராட்சத கிரேன் மூலம் ஏற்றி இணைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 4 இடங்களில் இப்பணி நடைபெற்றது. பணிகள் முழுவீச்சில் தீவிரமடைந்து, கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த பறக்கும் பாலத்தில் ஏறி, இறங்க சொக்கிகுளம் கோகலே ரோட்டிலும், அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் மொத்தம் 3 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டது.

பாலம் கட்டுமான பணியில் ஒப்பந்தகாரரின் அலட்சிய போக்கு காரணமாக பாலம் பொருத்தும் பணியின் போது, கிரேன் உடைந்து கீழே விழுந்தது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு உபகரணம் இல்லாமல், கட்டுமான பணியை மேற்கொண்டதிற்காக இந்த ஒப்பந்தகாரருக்கு ரூ.3 கோடியை அபராதமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விதித்தது. இந்த பாலத்திற்காக பிடிஆர் சிலை அதே இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை அதே இடத்தில் நிறுவப்படவுள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்து, பாலத்தின் மேலே தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும், பாலத்தில், மின் விளக்கிற்காக கம்பம் பொருத்தப்பட்டு அதில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாலத்தில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறும்போது, \”கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பாலத்தில் மின் விளக்கு பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோகலே ரோட்டில், மட்டும் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும். கட்டுமான பணியை விரைந்து முடித்து, ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்தகாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

விரைவில் திறப்பு விழா….
இந்த பாலம் தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாகும். மதுரை அவுட்போஸ்டில் பாலத்தில் ஏறினால், அய்யர்பங்களா, நாராயணபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கியதும், புதிய நான்குவழிசாலை வழியாக சென்று, நத்தம் கொட்டாம்பட்டி சாலையை அடையும். அங்கிருந்து கொட்டாம்பட்டி வழியாக திருச்சி நான்குவழிச்சாலையில் போய் சேரும். எனவே இந்த பறக்கும் சாலை வழியாக செல்லும்போது திருச்சிக்கு பயண 23 கி.மீ. பயண தூரமும், நேரமும் குறையும் என தேசிய நெடுஞ்சாலை துறை கணித்துள்ளது. தமிழகத்தில் 7.4 கி.மீ தூரம் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால், இப்பாலத்தை பிரதமர் திறந்து வைப்பார் என தேசிய நெடுசாலை ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்காக கட்டுமான பணியை விரைந்து முடிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.