அவங்க 71 ஆயிரம்னா நாங்க 1.14 லட்சம்… மத்திய பாஜக அரசுக்கு டஃப் கொடுக்கும் திமுக அரசு!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வேலைவாய்ப்பில் தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசும்போது, “இளைஞர்களுக்கு சிந்தனை, லட்சியம் குறிகோள் வேண்டும். சிந்தனை அதற்கேற்ற உழைப்பு இருந்தால் உங்களால் முடியும்; என்னால் முடியும்; நம்மால் முடியும்.

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 1,14.000 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கணேசன் கூறினார்.

10 லட்சம் பேருக்கு வேலை:
முன்னதாக இந்தியா முழுவதிலும் ரயில்வே, சுங்க வரி, வணிக வரி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 71 ஆயிரம் பேர் தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 20) ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

இந்தியா முழுவதிலும் மொத்தம் 45 இடங்களில் பணி ஆணை வழங்குவதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் பணி ஆணை வழங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் தேர்வாகியுள்ள 75 நபர்களுக்கு பணி ஆணை அளிக்கப்பட்டது.. அதில் 25 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணியாணை வழங்கினார். மீதமுள்ள 50 நபர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணி ஆணைகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 25 நபர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “‘ரோஜ்கர் மேளா’ என்கின்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 71,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.