காரியாபட்டி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் 66 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 800க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த தாலுகாவில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் நகர் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மருத்துவர், பணியாளர் பற்றாக்குறை

அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகிய வசதிகள் இல்லை. இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களை மதுரை, விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். காய்ச்சல், தலைவலி மற்றும் ஒரு சில நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் தற்போது 4 மருத்துவர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் இரண்டு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், மருத்துவர் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார்.  எக்ஸ்ரே மையம், ஆய்வகம், கண் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு பகுதிகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் கடந்த 2 ஆண்டாக மூடிக் கிடக்கிறது. மருந்து, மாத்திரை கொடுக்கும் இடத்தில் நிரந்தர மருந்தாளுநர் இல்லை. மாற்றுப் பணியில் ஒருவர் வந்து செல்கிறார்.

மருந்து, மாத்திரை இருப்பில் இல்லாதபோது, விருதுநகர் அரசு கிட்டங்கியில் இருந்து வாங்கி வருவதற்கு கூட ஆட்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் 4 பேர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த இடத்தில் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகள், கட்டிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் 18 படுக்கை வசதி இருந்தபோது, இருந்த பணியாளர்களே தற்போதும் உள்ளது. ஆனால், தற்போது 66 படுக்கை வசதி உள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்:

காரியாபட்டி வழியாக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.  விபத்தில் சிக்கி காயமடைவோருக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இங்கிருந்து மேல்சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.  இதனால், ஏற்படும் கால விரயத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மருத்துவமனை பணியாளர்கள் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனையில் தூய்மைப் பணி செய்யக் கூட பணியாளர்கள் இல்லை.  இரவு நேரக் காவலர்கள் இல்லை.

பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்’ என்றனர். பேரூராட்சி சேர்மன் செந்தில் கூறுகையில், ‘காரியாபட்டி அரசு மருத்துவமனை, கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தபோது, கூடுதல் கட்டிட வசதிகள் மற்றும் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இங்கிருந்த மருத்துவர்களை வேறு இடத்திற்கு மாற்றியதால், தொடர்ந்து மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.