தெலங்கானா முதல்வர் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் படுக்கை அறைக்குள் நள்ளிரவில் புகுந்த தாசில்தார்: பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கினார்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலாளராக உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி படுக்கை அறைக்கு நள்ளிரவில் புகுந்த  துணை தாசில்தார் மற்றும் அவரது நண்பரை பாதுகாப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கேட்டம் கம்யூனிட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினருடன்  வசிக்கின்றனர். இதில், வில்லா எண் 11ல் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் சந்திரசேகரராவின் அலுவலக செயலராகவும் உள்ள  சமீதா சபர்வால் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதில் எப்போதும் ஆக்டீவ்வாக இருப்பார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு துணை தாசில்தார் ஆனந்த்குமார் என்பவர், அவரது மற்றொரு ஆண் நண்பருடன் நள்ளிரவு 12 மணியளவில் கேட்டம்  கம்யூனிட்டிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஐஏஎஸ் அதிகாரி பெயர் மற்றும் வில்லா எண்ணை கூறி, அவரது நண்பர் என தெரிவித்துள்ளார். இதனால் அவரை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற ஆனந்த்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் பெண் அதிகாரி சமீதா சபர்வால் தங்கியிருந்த  வில்லாவில் உள்ள ஸ்லைடிங் டோரை திறந்து உள்ளே சென்றனர். மேலும் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து பார்த்த அதிகாரிக்கு   படுக்கை அறை வரை வந்தவர்களை  பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், நீங்கள் யார்? என கேட்டுள்ளார். அதற்கு ‘நான் துணை தாசில்தார், எனக்கு வேலையில் சில பிரச்னைகள் உள்ளது. அதுகுறித்து பேச வந்துள்ளேன்’ என ஆனந்தகுமார் கூறியுள்ளார்.
இதற்கிடையில் சமீதா சபர்வால் சத்தம் போட்டு கத்தினார். இதனால், வெளியே இருந்த பாதுகாப்பு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஆனந்தகுமார், அவரது நண்பரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் வெளியே நிறுத்தியிருந்த அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர். 2 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மூத்த பெண் ஐஏஎஸ் வீட்டிற்கு துணை தாசில்தார் நண்பருடன் இரவில் சென்றது ஏன்?  அவர் ஏதாவது குற்றசெயலில் ஈடுபடும் நோக்கத்துடன் சென்றாரா? அல்லது உண்மையாகவே வேலையை பற்றி பேச சென்றாரா?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நான் என் உயிரை காப்பாற்றி கொண்டேன்
பெண் ஐஏஎஸ் அதிகாரி சமீதா சபர்வால் நேற்று பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘இது மிகவும் வேதனையான அனுபவம். இரவில் ஒரு  நபர் என் வீட்டிற்குள் நுழைந்தார். திடமான மனநிலையால் சமாளித்து என் உயிரை காப்பாற்றி கொண்டேன். எவ்வளவு பாதுகாப்பாக இருப்பதாக  நினைத்தாலும்,  எப்போதும் ஒருமுறை கதவுகளை சரிபார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பூட்டி கொள்ள வேண்டும். அவசர காலத்தில் 100க்கு டயல் செய்யுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரி சமீதா சபர்வாலின் கருத்து மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காண்பிக்கிறது. முதல்வர் அலுவலக செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை.  மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.