Old Mysore Region: வெற்றியை தீர்மானிக்கும் கர்நாடக தமிழர்களின் வாக்கு வங்கி!

நடப்பாண்டை பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஏனெனில் வரிசையாக 9 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் வடகிழக்கில் மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டது. இதையடுத்து தெற்கில் முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக மாநில தேர்தல் வரவுள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. கடந்த 2018 தேர்தலை அடித்து ஆட்சி கவிழ்ப்பால் பாஜக ஆளுங்கட்சியாக நாற்காலியில் அமர்ந்தது. இம்முறை நேரடியாகவே ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

கர்நாடக வாழ் தமிழர்கள்

வரும் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை ஒட்டி கர்நாடகா இருப்பதால் நாமும் கவனிக்கக் கூடிய தேர்தலாக இருக்கிறது. அதற்கு அம்மாநிலத்தில் உள்ள பெங்களூரு, சாம்ராஜ் நகர், கோலார், தாவணகரே, தும்கூர், ஷிமோகா, மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழர்கள் பரவலாக வசித்து வருவதும் ஒரு காரணம்.

பழைய மைசூர் மண்டலம்

இங்குள்ள பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு வாக்கு வங்கியை பெற்றிருக்கின்றனர். அதில் பழைய மைசூரு மண்டலத்தை குறிப்பிட்டு சொல்லலாம். இங்கு வாழும் தமிழர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை கையாளும். ஒருகட்டத்தில்
காங்கிரஸ்
வாக்கு வங்கியாக திகழ்ந்த கர்நாடக தமிழர்களை, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்து பாஜக பக்கம் ஈர்த்தார் எடியூரப்பா.

ஒக்கலிகா வாக்குகள்

போட்டியை சமாளிக்க தமிழ் பெண்ணை மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக களமிறக்கிய நிகழ்வுகளும் உண்டு. பழைய மைசூரு மண்டலத்தில் கடந்த 1983, 2004, 2008, 2018 ஆகிய தேர்தல்களில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இது ஆட்சி அமைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தியது. பழைய மைசூரு மண்டலத்தில் தமிழர்கள் வாக்குகளை அடுத்து ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளும் பெருவாரியாக காணப்படுகின்றன.

பிரிந்த வாக்கு வங்கி

இவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு தான் எப்போதும் வாக்களிப்பர் என்ற பேச்சு உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இவர்களின் வாக்குகள் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக என படிப்படிப்பாக பிரிந்து வந்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரே அணியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறாமல் கிடைத்தன.

தமிழர்களின் வாக்குகள்

ஆனால் இம்முறை இரு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கினால் வாக்கு வங்கி பிளவுபடும். இந்த சூழலில் தமிழர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கர்நாடக வாழ் தமிழர்களை பொறுத்தவரை சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களாக, அமைப்புசார் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர்.

இம்முறை யாருக்கு?

அரசியல் ரீதியாகவும் அங்கீகரிக்கப்படுவது இல்லை. அவர்களின் குழந்தைகளுக்கான தமிழ் கல்வியும் எட்டாக் கனியாக மாறி கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் சரிசெய்ய முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர்கள் நிச்சயம் வாக்களிப்பர். இம்முறை தமிழர்களின் வாக்குகளை அறுவடைய செய்ய போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.